ஈபிஎஸ் நடத்தப்போகும் தனிக் கூட்டம்... என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?: அதிமுகவில் மீண்டும் பதவி யுத்தம்

ஈபிஎஸ் நடத்தப்போகும் தனிக் கூட்டம்... என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?: அதிமுகவில் மீண்டும் பதவி யுத்தம்

அதிமுக தலைமை கழக நிர்வாகிகளின் கூட்டத்தை இன்று ஈபிஎஸ் தன்னிச்சையாக நடத்தப் போகிறார். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுகவில் மீண்டும் பதவி யுத்தம் தொடங்கியுள்ளது கட்சியினரை விழிபிதுங்க வைத்துள்ளது.

சென்னையில் கடந்த 23-ம் தேதி நடந்துமுடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியால் அவமானப்படுத்தப்பட்டார் ஓபிஎஸ். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபாேதே ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறியதாேடு, இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவித்தனர். இதனிடையே, ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்து மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகளின் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

அ.தி.மு.க. தலைமை கழகம் என்ற பெயரில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 27-ம் தேதி (இன்று) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்தின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, 'அதிமுகவின் சட்ட, திட்ட விதி 20A(v)-ன்கீழ் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. அதன்படி, இருவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால், இருவருடைய ஒப்புதலுமின்றி, கையொப்பம் இல்லாமல், 'கழக தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம்' என்ற பெயரில் கழக சட்ட, திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த அறிவிப்பில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று காலை 10 மணிக்கு, தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், விதியை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம், கழக சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும். கழக சட்டத் திட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும், கழகத் தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் ஓபிஎஸ்.

கட்சிக்குள் ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே நடக்கும் பதவி சண்டையால் தொண்டர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். ஈபிஎஸ் இன்று நடத்தும் கூட்டத்திற்கு நிர்வாகிகள் வருவார்களா அல்லது கூட்டத்தில் எப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதன் பிறகு ஓபிஎஸ் என்ன வியூகம் வகுக்கப்போகிறார் என்பது கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in