'இன்னொரு நாளில் சந்திக்கிறேன்' - பழனி கோயிலில் நழுவிய ஓபிஎஸ்!

'இன்னொரு நாளில் சந்திக்கிறேன்' - பழனி  கோயிலில் நழுவிய ஓபிஎஸ்!

பழனி கோயிலுக்கு வந்த தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு நாளில் சந்திக்கிறேன் என செய்தியாளர்களிடம் இருந்து நழுவினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்., வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த்,, அமமுக சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் ஈபிஎஸ் அணி சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். செந்தில்முருகன் நேற்று முன் தினம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தனது வேட்பாளரை திரும்ப பெற முடியாது என ஈபிஎஸ் கூறிவிட்டார்.

ஓபிஎஸ்சை உள்ளடக்கிய பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுகவிற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஈபிஎஸ் அணி வேட்பாளர் தென்னரசு பிப்.7ல் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அதிமுக வேட்பாளராக தென்னரசை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் அனுப்பி வருகிறார்.

இந்நிலையில், தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோயிலுக்கு ஓபிஎஸ் நேற்றிரவு வந்தார். இதை மோப்பம் பிடித்த செய்தியாளர்கள் அவரை சந்திக்கச் சென்றனர். 'சுவாமி கும்பிட மட்டும் தான் வந்துள்ளேன். இன்னொரு நாளில் சந்திக்கிறேன்' என அங்கிருந்து நழுவினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சர்ச்சைக்குரிய பதில்களை சொல்லி சிக்கி விடக்கூடாது என்பதற்காக லாவகமாக நழுவியுள்ளார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in