
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அப்போலோ மருத்துவர்கள், சசிகலா உறவினர்கள் உள்பட 154 பேரிடம் விசாரணை நடத்தி முடித்துவிட்டது. 90 சதவீத விசாரணை முடிவடைந்த நிலையில் தற்போது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. மீண்டும் அப்போலோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களின் வாக்குமூலத்தை ஆணையம் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆணையம் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முதன் முறையாக ஓபிஎஸ் மற்றும் இளவரசி ஆகியோர் இன்று ஆஜராக வேண்டும் என ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ஓபிஎஸ் பெற்றுக்கொண்ட நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை வாக்குமூலமாக அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று சசிகலாவுடன் அப்போலோ மருத்துவமனையில் இருந்த அவரது அண்ணன் மனைவி இளவரசியும் ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில் அவரும் இன்று ஆஜராவார் என தெரிகிறது. இவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கையை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.