ஒருபக்கம் ஈபிஎஸ் ஆலோசனை... மறுபக்கம் வெட்டி எறியப்பட்ட ஓபிஎஸ் படம்: அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு

ஒருபக்கம் ஈபிஎஸ் ஆலோசனை... மறுபக்கம் வெட்டி எறியப்பட்ட ஓபிஎஸ் படம்: அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது ஓபிஎஸ் படம் கத்தியால் வெட்டி எறியப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈபிஎஸ் ஆதரவாளர்களின் இந்த செயல் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

களேபரத்துக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு தீவிர ஆலோசனைகளை தனித்தனியாக நடத்தி வருகின்றனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பு ஓபிஎஸ் தரப்பை கொந்தளிக்க வைத்தது. ஆயிரம் சண்முகம் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று கோவை செல்வராஜ் பதிலடி கொடுத்தார். ஓபிஎஸ் மீண்டும் வீறு கொண்டு எழுவார் என்றார்.

இதனிடையே, "அ.தி.மு.க.தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெறும்" என்று தலைமை நிலைய செயலாளர் ஈபிஎஸ் பெயரில் அறிக்கை வெளியானது. இதையடுத்து, ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலுமின்றி, கையொப்பம் இல்லாமல், 'கழக தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம்' என்ற பெயரில் கழக சட்ட, திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும் கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும், கழகத் தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஈபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஈபிஎஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்குவது என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவிக்கு கே.பி.முனுசாமி அல்லது திண்டுக்கல் சீனிவாசனை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஒரு பக்கம் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படத்தை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கத்தியால் வெட்டி வீசினர். ஈபிஎஸ் ஆதரவாளர்களின் இந்த செயல் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், தெரியாமல் ஓபிஎஸ் படத்தை கிழித்துவிட்டனர் என்று மழுப்பலாக பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in