`தர்மம் வென்றது; மகிழ்ச்சியாக உள்ளோம்'- ஓபிஎஸ் சொந்த ஊரில் ஆதரவாளர்கள் இனிப்புடன் கொண்டாட்டம்!

பெரியகுளத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
பெரியகுளத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

பெரியகுளத்தில் பட்டாசு வெடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
பெரியகுளத்தில் பட்டாசு வெடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

கடந்த ஜுலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தது செல்லாது என்றும், அவர் நடத்திய பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை வரவேற்று ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவரது ஆதரவாளர்கள் அதிகம் இருக்கக்கூடிய தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி, பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளரான ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட இணைச்செயலாளர் சோலை முருகன் காமதேனுவிடம் கூறிய போது, "தர்மம் வென்றது, நிச்சயமாக இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று. அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம்" என்றார். மேலும், இது தொடர்பாக ஈபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா என்றதற்கு, "வழக்கு உச்ச நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்ததால் மேல் முறையீட்டுக்கான வாய்ப்பு இருக்காது என்று நம்புகிறோம். இது குறித்து தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in