கூட்டணி கட்சித் தலைவர்கள் வரிசையில் காத்திருந்து திரௌபதி முர்முவை சந்தித்தார் ஓபிஎஸ்!

கூட்டணி கட்சித் தலைவர்கள் வரிசையில் காத்திருந்து திரௌபதி முர்முவை சந்தித்தார் ஓபிஎஸ்!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆதரவு கோரினார். அவர்களின் சந்திப்பு முடிந்த நிலையில், ஈபிஎஸ் அங்கிருந்து கிளம்பியதும், ஓபிஎஸ் தனியாகச் சென்று திரௌபதி முர்முவை சந்தித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் திரௌபதி முர்மு இந்தியா முழுவதும் கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். அவர் தமிழகத்தில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதற்காகச் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இந்த சந்திப்பின் போது கூட்டணி கட்சியினர் வரிசையில் காத்திருந்தார்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து சென்ற பிறகு ஓபிஎஸ், வைத்திலிங்கம், எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் திரௌபதி முர்முவை தனியாகச் சந்திக்க விரும்புவதாக அண்ணாமலையிடம் வலியுறுத்தியதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனியாகக் குடியரசுத் தலைவர் வேட்பாளர் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை காரணமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோருக்கிடையே மோதல்கள் வெடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது நடைபெற்ற குடியரசுத் தலைவர் வேட்பாளர் சந்திப்பில் பாஜக இருதரப்பினரையும் சமாதானப் படுத்த முயலாமல், காய்களை நகர்த்தி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in