கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம்: சபாநாயகர் அப்பாவுவுக்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்!

கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம்: சபாநாயகர் அப்பாவுவுக்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசிக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2-வது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ்சும் இருந்து வந்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட தோல்வியால் ஒற்றைத் தலைமை கோஷம் அதிமுகவில் ஒழிக்கத் தொடங்கியது. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை நோக்கி காய் நகர்த்த தொடங்கினர். இது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜூலையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஈபிஎஸ் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். முன்னதாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கினார் ஈபிஎஸ். இதனிடையே, பொதுக்குழு தீர்மானத்திற்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் விரைவில் கூட இருக்கிறது. இதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சி தொடர்பாக சட்டப்பேரவையில் யாரும் பேசக்கூடாது என்று அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அவர் கடிவாளம் போட்டுள்ளார். இதனிடையே, சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவுக்கு ஓபிஎஸ் இன்று திடீரென கடிதம் எழுதி உள்ளார். அதில், தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் ஆலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருப்பது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in