`கூட்டத்தை கூட்டுவதற்கு ஈபிஎஸ்-க்கு அதிகாரமேயில்லை'- தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் அழுத்தமான கடிதம்

`கூட்டத்தை கூட்டுவதற்கு ஈபிஎஸ்-க்கு  அதிகாரமேயில்லை'- தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் அழுத்தமான கடிதம்

``தலைமை நிலைய செயலாளரின் பெயரால் கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு கட்சியின் சட்ட விதிகளின்படி எந்த அதிகாரமும் இல்லை. அது சட்டவிரோதமானது'' என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்-க்கும் ஈபிஎஸ்-க்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு ஈபிஎஸ்-க்கே உள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்சை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கி ஈபிஎஸ் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அதோடு அடுத்த பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11-ம் தேதி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர் .

இந்நிலையில், பொதுக்குழு நடக்காது என்று உறுதியாக கூறி வரும் ஓபிஎஸ் தரப்பினர், அதற்கான சட்ட நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாக தெரிகிறது. நேற்று ஈபிஎஸ் தரப்பில் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஜூலை 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த கூட்டத்திற்கு ஓபிஎஸ் தரப்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை அனைத்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ``12.09.2017 அன்று அதிமுக சட்ட விதிகள் திருத்தப்பட்டு, அதன் மூலம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் துணை விதி 20-A-ன் படி உருவாக்கப்பட்டன. விதி 20-A (2) இன் படி, மேற்கண்ட இரண்டு பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. விதி 20-A (3) இன் படி, மேற்படி பதவிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இந்தத் திருத்தங்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 29-A (9) இன் படி, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்போதிருந்து, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் துணைச் சட்டங்களின்படி தங்கள் பணிகளைச் செய்துள்ளனர். அதன் பின் அதிமுக, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பல தேர்தல்களை சந்தித்துள்ளது.

முன்பு இருந்த பொதுச் செயலாளர் பதவியைத் தேர்ந்தெடுக்க கட்சியின் முதன்மை உறுப்பினர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. திருத்தப்பட்ட விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கட்சியின் முதன்மை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விதியை பொதுக்குழுவோ, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரோ திருத்தவோ மாற்றவோ அல்லது நீக்கவோ கூடாது. இந்த திருத்தங்கள் உடனடியாக 01-12-2021 அன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் கட்சி நிர்வாகத்தையும் செயல்பாடுகளையும் சீர்குலைக்கும் நோக்கில், கட்சிக்குள் உள்ள சில சுயநலவாதிகள், ஒற்றைத் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினையை எழுப்பியுள்ளனர், இது முற்றிலும் தேவையற்றது. 23-6-2022 அன்று நடைபெற்ற பொதுக்குழு சட்டவிரோதமானது, அது கட்சியின் விதிகளுக்கு மாறாக நடந்தது. நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக நடந்தது. இந்நிலையில் கட்சியின் அவைத் தலைவர் அடுத்த பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக அறிவித்திருப்பது, கட்சியின் துணை விதிகளின்படி சட்டப்படி செல்லுபடியாகாது.

அந்த பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழுவில் இல்லாத அங்கீகரிக்கப்படாத நபர்கள் பங்கேற்றுள்ளனர். அந்த நபர்கள் கட்சி வழங்கிய வழிகாட்டுதலுக்கு மாறாக சில சுயநலவாதிகளால் அந்த இடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி கூட்டத்திற்கு அரசின் போலீஸ் பாதுகாப்புக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

கூட்டத்தில் இருந்த சிலர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வீசியதும், கட்சியின் ஒருங்கிணைப்பாளரை அழைத்துச் சென்ற போலீஸ் பாதுகாப்பு அதிகாரி மீதும் தண்ணீர் பாட்டில் ஒன்று தாக்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்நிலையில் 26.06.2022 இரவு சுமார் 9 மணியளவில், செய்தி சேனல்களில் ஒரு அறிவிப்பு வெளியானது. 27.06.2022 காலை 10 மணிக்கு கட்சி அலுவலகமான "எம்.ஜி.ஆர் மாளிகை"யில் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தலைமை கழக நிர்வாகிகள் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேற்படி கடிதத்தில் கையொப்பம் ஏதும் இல்லை. அதில், "தலைமை அலுவலக செயலாளர்" என்ற பெயர் மட்டுமே இருந்தது. தலைமை அலுவலக செயலாளரின் பெயரால் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பது கட்சியின் சட்ட விதிகளின்படி எந்த அதிகாரமும் அற்றது. மேலும் இது சட்டவிரோதமானது மற்றும் இது விதி 32 இன் படி செல்லுபடியாகாது.

துணை ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து ஒருங்கிணைப்பாளராக உள்ள நானும், துணை விதிகளின்படி கட்சி நிர்வாகத்தில் எந்த ஒரு கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்கும் ஒரே அதிகாரம் உடையவன் என்று சமர்ப்பிக்கப்படுகிறது. அவர்கள் அந்த தகவலை அனைத்துக் கட்சி அலுவலகப் பொறுப்பாளர்களுக்கும் அனுப்பவில்லை. வேண்டுமென்றே செய்தி மற்றும் அச்சு ஊடகங்களில் பரப்பியுள்ளனர். அதற்காக அவர்களுக்கு எந்த அதிகாரமும் அங்கீகாரமும் இல்லை.

27.06.2022 அன்று நடைபெற்ற சட்டத்திற்கு புறம்பான கூட்டத்தில் 11.07.2022 அன்று நடைபெறும் கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்பட்டது. எந்த அதிகாரமும் இல்லாமல் அவைத் தலைவர் அழைப்பு விடுத்தார். ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ தற்போதைய கூட்டத்தை கூட்டவில்லை. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவையும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அதோடு கட்சியின் பொருளாளர் என்ற முறையில் பொதுக்குழு கூட்டத்தில் கணக்கு அறிக்கையை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், நான் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதையும் தலைமை தேர்தல் ஆணையாளருக்கு பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in