'அவர் அதிமுக எம்பி தான்; ஈபிஎஸ் கடிதத்தை நிராகரியுங்கள்'- மக்களவை சபாநாயகரிடம் மகனுக்காக முறையிடும் ஓபிஎஸ்!

'அவர் அதிமுக எம்பி தான்; ஈபிஎஸ் கடிதத்தை நிராகரியுங்கள்'- மக்களவை சபாநாயகரிடம் மகனுக்காக முறையிடும் ஓபிஎஸ்!

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் உட்பட பலர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர். “அதிமுகவின் கொள்கைகளுக்கு மாறாகச் செயல்பட்ட காரணத்தினால் அதிமுகவினுடைய ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் கட்சியிருந்து நீக்கப்பட்டுவிட்டார். இதனால் அவரை அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகக் கருதக்கூடாது” என எடப்பாடி பழனிசாமி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பி. ரவீந்திரநாத்தும் மக்களவை சபாநாயகருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “ஜூலை 11-ம் தேதி ஒரு சில பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி அதிமுக தற்காலிக பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறேன். ரவீந்திரநாத் குறித்து எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள கடிதத்தை ஏற்கக் கூடாது. ரவீந்திரநாத் அதிமுகவின் எம்.பி.யாகவே தொடர்கிறார். பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் தேர்தல் ஆணையத்திலும் நாங்கள் முறையிட்டுள்ளோம். ஆகவே எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை நிராகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in