நான் தான் ஒருங்கிணைப்பாளர்; அதிமுகவின் ஏழு வங்கிக் கணக்குகளை முடக்குங்கள்: ரிசர்வ் வங்கிக்கு ஓபிஎஸ் அவசர கடிதம்

நான் தான் ஒருங்கிணைப்பாளர்; அதிமுகவின் ஏழு வங்கிக் கணக்குகளை முடக்குங்கள்:  ரிசர்வ் வங்கிக்கு  ஓபிஎஸ் அவசர கடிதம்

அதிமுகவின் ஏழு வங்கிக் கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை வானகரத்தில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராகவும், திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளைத் திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் எனக் கடந்த 12-ம் தேதி வங்கிகளுக்குக் கடிதம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் “என்னைக் கேட்காமல் வங்கி வரவு, செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் '' என அந்த வங்கிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், அவரின் கடிதத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி ஓபிஎஸ்சின் கடிதத்தை வங்கிகள் நிராகரித்து விட்டன. மேலும் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகள், அதிமுக சட்ட விதிகள் உள்ளிட்டவற்றையும் கடிதத்துடன் இணைத்துக் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியின் கடிதம் ஏற்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுகவின் ஏழு வங்கிக் கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், “அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் இருக்கின்றன. மேலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டிருக்கிறோம். இந்த நிலையில் அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என நான் ஏற்கெனவே அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், அந்த வங்கிகள் எனது கோரிக்கையை செயல்படுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின்படி தற்போதுவரை நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை அதிமுகவின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்க வேண்டும். இது குறித்து உடனடியாக அந்த வங்கிகளுக்கு எனது கோரிக்கையைச் செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த வங்கிகளில் அதிமுகவிற்குக் கணக்கு இருக்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in