ஈபிஎஸ்க்கு பகிரங்க கடிதம் அனுப்பினார் ஓபிஎஸ்!- அடுத்து நடப்பது என்ன?

ஈபிஎஸ்க்கு பகிரங்க கடிதம் அனுப்பினார் ஓபிஎஸ்!- அடுத்து நடப்பது என்ன?

சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி வரும் 23-ம் தேதி நடைபெறும் பொதுக்குழு தேதியைத் தள்ளி வைக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்க்கு காரசாரமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டுள்ளதன் காரணமாகக் கடந்த 7 நாட்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஒற்றைத் தலைமை பிரச்சினை வெடிக்க தொடங்கியதிலிருந்தே கட்சியின் மூத்த நிர்வாகிகள் இரு தரப்பிலும் தூது சென்று வருகிறார்கள். இந்த பிரச்சினையில் இதுவரை சுமுக முடிவு எட்டப்படாததால் இருதரப்பிலும் கடுமையான விவாதங்களை பொதுவெளியில் முன்வைத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தைச் செய்தியாளர்கள் முன்பு வைத்திலிங்கம் வாசித்துக் காட்டினார்.

அந்த கடிதத்தில், “23.06.2022 அன்று நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்து விவாதிக்க, முடிவெடுக்க அதிமுக தலைமைக் கழகத்தில் கடந்த 16.06.2022 அன்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப் பற்றாக்குறை காரணமாகச் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவலை தாங்கள் தெரிவித்தீர்கள். கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்தபிறகு, முன் அறிவிப்பில்லாமல் ஒற்றைத் தலைமை, இரட்டை தலைமை குறித்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. பொதுவாகக் கழக அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரைச் சிறப்பு அழைப்பாளராக பொதுக் குழுவிற்கு அழைப்பது ஆண்டாண்டு காலமாகக் கழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது நடைமுறை. இந்த நடைமுறையை 23.06.2022 அன்று நடைபெற உள்ள பொதுக்குழுவில் பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்த கட்சி நிர்வாகிகள் எங்களைத் தொலைப்பேசி வாயிலாகவும், நேரில் சந்தித்தும் எங்களைச் சிறப்பு அழைப்பாளராக அழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

அதே மண்டபத்தில் ஜெயலலிதா பொதுக்குழு நடத்தியபோதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். இப்போதும் அதே மண்டபத்தில்தான் பொதுக்குழு நடைபெறுகிறது. அங்கு இடம் போதவில்லை என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை என்பதையும் அவர்கள் ஆதாரத்தோடு தெரிவித்திருக்கிறார்கள். 16.06.22 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கழக சட்ட விதிகளைத் தெரியாமல் சில கழக நிர்வாகிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அத்தகைய கருத்தால் கழக நிர்வாகிகள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். இதனால் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய அசாதாரண சூழ்நிலைக் காரணமாகச் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதனால் கழக தொண்டர்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்திற்கான பொருள், அஜண்டாவினை நிர்ணயம் செய்து கூட்டம் நடத்துவது அவசியமாகிறது. சட்டப்படி அப்படித்தான் நடத்த வேண்டும் எனச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். எனவே மேற்காணும் சூழலைக் கருத்தில் கொண்டு 23.06.2022 அன்று நடைபெறவுள்ள செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தைத் தள்ளி வைக்கலாம். அடுத்த கூட்டம் நடைபெறும் இடத்தை நாம் இருவரும் சேர்ந்து முடிவெடுக்கலாம்” எனவும் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in