அன்புச் சகோதரர் ஈபிஎஸ், சசிகலா, தினகரன் எங்களோடு இணைய வேண்டும்: ஓபிஎஸ் திடீர் அழைப்பு

அன்புச் சகோதரர் ஈபிஎஸ், சசிகலா, தினகரன் எங்களோடு இணைய வேண்டும்: ஓபிஎஸ் திடீர் அழைப்பு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து சட்ட ரீதியான முன்னெடுப்புகளைச் செய்யப் போவதில்லை. பொதுக் குழுவைக் கூட்டுவதற்கான வேலைகளைச் செய்ய உள்ளோம் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு சில பிரச்சினைகளால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளவுற்றிருந்த காரணத்தால் திமுக ஆளும் கட்சியாக வரமுடிந்தது. இன்றைக்கும் எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அவற்றையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்று படவேண்டும். எந்த நோக்கத்திற்காக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் போராடினார்களோ அந்த நோக்கத்திற்காக மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். அது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. எங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது என்று சொல்லமாட்டேன். இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள். இதற்கு முன்னாள் ஏற்பட்ட அனைத்து கசப்புகளை யாரும் மனதிலே வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு, கழகத்தினுடைய ஒற்றுமையே பிரதானமாக வைத்துச் செயல்பட வேண்டும்.

மக்கள் விரோத ப்போக்கை திமுக எடுக்கும் போது, அதை எதிர்த்து குரல் கொடுக்கக் கூடிய முதல் கட்சியாக அதிமுக இருக்கும். ஜெயலலிதா இறந்த பிறகு நான்கரை ஆண்டு காலம் அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அவரோடு முழு ஒத்துழைப்போடு அனைவரும் பயணித்திருக்கிறோம். அந்த நிலை மீண்டும் வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு கூட்டுத் தலைமையாக அதிமுக செயல்படும் என ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன. நாங்கள் இருவரும் சிறப்பாக அதிமுக சட்ட விதிகளின்படி பணிகளை நிறைவாக ஆற்றினோம். அவரிடமும், எங்களிடமும் எவ்வித குறைபாடும் இல்லை என்பதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். சசிகலாவும், தினகரனும் கூட எங்களோடு இணைய வேண்டும் என நினைக்கிறேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in