நில அபகரிப்பு வழக்கில் ஓபிஎஸ்?

சீரியஸாகிறது 182 ஏக்கர் அரசு நில அபகரிப்பு விவகாரம்!
ஓபிஎஸ்
ஓபிஎஸ்

ஓபிஎஸ்சின் தம்பிகளில் ஒருவரான சண்முகசுந்தரம் பக்கத்தில் இருக்கும் டாக்டர் ஒருவரின் வீட்டின் சில அடிகளையும் சேர்த்து ஆக்கிரமிக்க முயன்றதும், நிலஅளவைத் துறையினர் அளந்ததும் சமீபத்தில் பரபரப்பானது. ஆனால், அதைவிட பெரிய சிக்கல் ஒன்று, மலைப்பாம்பு போல ஓபிஎஸ்சை சுற்றிக்கொண்டிருக்கிறது. 182 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்த விவகாரம் தான் அது.

தென்மாவட்டத்திலேயே, எழிலான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்று தேனி ஆட்சியர் அலுவலகத்தைச் சொல்வார்கள். காரணம், கரடு என்றழைக்கப்படும் மண்மலை மீது ’கேக்’ மாதிரி அமர்ந்திருக்கிறது இந்த அலுவலகம். அந்தப் பகுதி முழுக்க இப்படி நிறைய கரடுகள் உண்டு. ஆட்சியர் அலுவலகத்துக்குப் பின்னால் இருந்த இப்படியான கரடுகளில் ஒன்று மாயமாகிவிட்டதாக, கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் வீட்டு (கேம்ப் ஆபீஸ்) மாடியில் இருந்து பார்த்தாலே தெரியும் அந்த மலை காணாமல் போனது குறித்து, விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உயர் மட்டக்குழுவை அமைத்தது.

அதிகாரிகள் வந்து அளந்து பார்த்துவிட்டு, ஆமாம். அந்தக் கரட்டை, செம்மண் கிராவல் அள்ளியே காலி செய்திருக்கிறார்கள் என்று அறிக்கை கொடுத்தார்கள். அதன் அடிப்படையில் பெரியகுளம் ஆர்டிஓ, அந்த நிலத்தில் கிராவல் கொள்ளையடித்த அதிமுக ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் அவரது சகாக்கள் சிலருக்கு 16 லட்ச ரூபாய் அபராதம் விதித்தார்.

அதில் பாதியைச் செலுத்திய அவர்கள், அதன் பிறகும் தொடர்ந்து அதே இடத்தில் கிராவல் அள்ளிக்கொண்டிருக்க, மீண்டும் புகார்கள் பறந்தன. பெரியகுளம் சப் கலெக்டராக துடிப்பான இளம் ஐஏஎஸ் அதிகாரி ரிஷப் பொறுப்பேற்றார். தொடர்ந்து புகார்கள் வந்ததால், அதுகுறித்த உண்மைத் தன்மையை அறிவதற்காக அரசு ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது புகாருக்குரிய அரசு நிலங்கள் அனைத்தும், தனியாருக்குப் பட்டா போடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

நடந்தது எப்படி?

இது எப்படி நடந்தது என்று விசாரித்தபோது, 2015 - 2017 கால கட்டத்தில் அரசு நிலங்கள் தொடர்பான 'அ' பதிவேட்டில் சின்னச் சின்னத் திருத்தங்கள் இருந்தால் மேற்கொள்ளலாம் என்று ஆர்டிஓவுக்கு அங்கீகாரம் தந்தது அரசு. அதாவது, அரசு இணையத்துக்குள் நுழைந்து, தங்களது டிஜிட்டல் கையெழுத்தைப் பதிவு செய்து ஆவணங்களில் சின்னச் சின்னத் திருத்தங்களை மேற்கொள்ளலாம். இதில் தான் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் அன்றைய வருவாய்த் துறை அலுவலர்கள். அரசியல்வாதிகளிடமும், கிராவல் கொள்ளையர்களிடமும் பணத்தை வாங்கிக்கொண்டு, அரசு நிலத்தை எல்லாம் இப்படி டிஜிட்டல் கையெழுத்துப் போட்டு, தனியாரின் பெயருக்கு வழங்கி, பட்டாவும் கொடுத்திருக்கிறது இந்த அதிகாரிகள் பட்டாளம்.

ஒரு சர்வே எண்ணில் 41 ஏக்கர் அரசு நிலம் இருந்தால், மொத்தத்தையும் தனியார் பெயருக்கு மாற்றினால், அந்த சர்வே எண்ணில் நிலமே இல்லாமல் போய்விடும்; மாட்டிக்கொள்வோம் என்பதால், அதை 4.1 ஏக்கர் என்று தந்திரமாகத் திருத்திவிட்டு, இன்னொரு சர்வே எண்ணை போலியாக உருவாக்கி மீதி 37 ஏக்கர் நிலத்தையும் தனியாருக்குப் பட்டா போட்டிருக்கிறார்கள். இப்படி ஆட்சியர் அலுவலகம் பின்னுள்ள வடவீரநாயக்கன்பட்டியில் மட்டும் 109 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு நிற்காமல் தாமரைப்பட்டியில் 60, கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள் அந்த அதிகாரிகள்.

அதிகாரிகள் பட்டியல்

இந்த விவரம் மேலிடத்தின் கவனத்துக்குச் சென்றதும், அந்தக் காலகட்டத்தில் வருவாய்த் துறையில் பணியாற்றிய அத்தனை அதிகாரிகள் பட்டியலையும் அனுப்பச் சொல்லி உத்தரவு வந்தது. இதன்படி பெரியகுளம் ஆர்டிஓவாக இருந்த ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார் தொடங்கி துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் உள்ளிட்டோரின் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டது. கூடவே, அக்காலத்தில் ஆட்சியராக இருந்த வெங்கடாச்சலம், பல்லவி பல்தேவ் ஆகியோரின் பெயர்களும் அனுப்பப்பட்டன.

அவர்கள் மீது முறைப்படி புகார் கொடுக்க மேலிட அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து சப்-கலெக்டர் ரிஷப், தேனி மாவட்ட குற்றப்பிரிவில் தனித்தனியே மூன்று புகார்களைக் கொடுத்து அவை வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டன. தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும், முன்னாள் ஆர்டிஓக்களான ஜெயப்பிரிதா, ஆனந்தி ஆகியோர் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, தங்களது பாஸ்வேர்டை திருடி யாரோ ஆவணங்களைத் திருத்தியிருக்கிறார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர். அதுகுறித்து எஃஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்றதும், சிஎஸ்ஆர் (மனு பெற்றுக்கொண்டதற்கான ரசீது) மட்டுமாவது கொடுங்கள் என்று நெருக்கடி கொடுத்து வாங்கிவைத்திருக்கிறார்கள்.

சிபிசிஐடிக்கு மாற்றம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பார்க்கிற தூரத்தில் நடந்த இந்த மோசடியை எப்படி அன்றைய ஆட்சியர்களான வெங்கடாச்சலம், பல்லவி பல்தேவ் ஆகியோர் கண்டுகொள்ளாமல் விட்டனர்? அங்கு அள்ளப்படும் கிராவல் மண்ணைச் சுமந்து செல்லும் லாரிகள் தேனி பிரதான சாலை அல்லது பெரியகுளம் சாலையில் தான் செல்லும். ஆனாலும் போலீஸாரோ, அதிகாரிகளோ அதை தடுத்து நிறுத்தாதது ஏன்? ஏற்கெனவே, மண் கொள்ளைக்காக அபராதம் விதிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மண் கொள்ளை நடக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்வதற்கு மாறாக, அந்த அரசு இடத்தையே ஏன் அதிமுக பிரமுகருக்குப் பட்டா போட்டுக் கொடுத்தார்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.

ஆர்டிஓ தொடங்கி அமைச்சர் வரையில் இந்தத் தொடர்புச் சங்கிலி நீள்வதால், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைத்திருக்கிறது தேனி போலீஸ்.

ஓபிஎஸ் தம்பியின் ரோஸி சிபிஎஸ்சி பள்ளி.
ஓபிஎஸ் தம்பியின் ரோஸி சிபிஎஸ்சி பள்ளி.

எங்கே போனது கிராவல்?

மலையைக் கரைத்து எடுத்த கிராவல் மண்ணில் பெரும்பகுதியை ஓபிஎஸ்சின் தம்பிகளில் ஒருவரான ஓ.ராஜா, பெரியகுளம் லட்சுமிநகரில் தனது மகள் ரோஸி பெயரில் கட்டியுள்ள சிபிஎஸ்இ பள்ளியின் அஸ்திவாரம் மற்றும் மைதானத்துக்காக பயன்படுத்தியிருக்கிறார். அதேபோல, கட்டுமான தொழில் செய்யும் ஓபிஎஸ்சின் மைத்துனர் சரவணனும் இந்த கிராவலில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியிருக்கிறார். ஓபிஎஸ் ஆதரவு பெற்ற அரசு ஒப்பந்ததாரர்கள் பலர் அரசு கட்டிடப் பணிக்கே இந்த கிராவலைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே புதிதாக கட்டப்பட்டிருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடத்தின் அஸ்திவாரத்துக்கும் இந்தக் கிராவலைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.

ஆக, ஓபிஎஸ்சின் பினாமிதான் அந்தக் கிராவல் குவாரியை நடத்துகிறார் என்ற பயத்தில்தான் போலீஸாரும், வருவாய்த் துறையினரும் கிராவல் கொள்ளையைத் தடுக்காமல், சல்யூட் அடித்து அனுப்பிவைத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்திருக்கிறது.

தேனி ஆட்சியர் முரளிதரன்
தேனி ஆட்சியர் முரளிதரன்

கலெக்டரைச் சந்தித்த ஓபிஎஸ்

கடந்த 20 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனை, ஆட்சியர் அலுவலகத்துக்கே வந்து சந்தித்தார் ஓபிஎஸ். அப்போது உதவியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு ஆட்சியரும், ஓபிஎஸ்சும் மட்டும் சுமார் 1 மணி நேரம் பேசியதாகச் சொல்கிறார்கள். பொதுப்பிரச்சினைக்காக அவர்கள் சந்தித்ததாகச் சொல்லப்பட்டாலும், ஓபிஎஸ்ஸோ, கலெக்டரோ இதுகுறித்து எந்த செய்தியறிக்கையும் வெளியிடவில்லை. அந்தச் சந்திப்பு நில மோசடி விவகாரம் தொடர்பானதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதை ஊர்ஜிதப்படுத்துவது போலவே ஆட்சியரின் செயல்பாடுகள் இருக்கின்றன என்கிறார்கள் தேனி பத்திரிகையாளர்கள்.

இந்தப் பிரச்சினையில் ஓபிஎஸ் வலுவாக சிக்கியிருக்கிறார். ஆனால், அவரைக் கைக்குள் வைத்துக்கொண்டு அரசியல் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. அதனாலேயே அவரை விட்டுவைத்திருக்கிறார்கள் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சிபிசிஐடி உண்மையை வெளிக்கொணருமா?

வழக்கு சிபிசிஐடி வசம் போய்விட்டதால், நியாயம் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தேனி சிபிசிஐடி பிரிவில் இருக்கும் அதிகாரிகள் புலனாய்வு விஷயத்தில் வீக்கானவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. "நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கை இவர்கள்தான் கையாள்கிறார்கள். அந்த வழக்கையே திறமையாக கையாளாத இவர்கள், எப்படி ஓபிஎஸ் வரையில் தொடர்புடைய நில மோசடி வழக்கை திறம்பட விசாரிக்க முடியும்?” என்று கேட்கும் தேனி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி, விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

ஓ.ராஜா, ஓபிஎஸ்
ஓ.ராஜா, ஓபிஎஸ்

அடுத்தது என்ன?

இந்த நில மோசடியின் கதாநாயகனான அதிமுக ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷை, ஏற்கெனவே கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். கொள்ளைபோன அரசு நிலம் 182 ஏக்கரும் மீட்கப்பட்டிருக்கிறது. ஆர்டிஓக்கள் உட்பட 14 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. சர்வேயர் உள்ளிட்ட சிலர் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பெரியகுளம் முன்னாள் ஆர்டிஓவான ஆனந்தி, பரவை அதிமுக செயலாளரின் மகள். அவரை தேனி மாவட்டத்தில் பணியமர்த்தி அழகுபார்த்த ஓபிஎஸ், அவரின் திருமணத்துக்கும் நேரில் போய் வாழ்த்தியவர். அவரைப் போலீஸார் கைதுசெய்தால், ஓபிஎஸ்சையும் நெருங்குகிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். பக்கத்து மாவட்டமான பழனியில் ஆனந்தி தொடர்ந்து நிம்மதியாகப் பணிபுரிந்தால், ஓபிஎஸ்சுக்கு மட்டுமல்ல அவரது தம்பி, மைத்துனர் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றே புரிந்துகொள்ளலாம்.

ஆர்.பி.உதயகுமாருக்கும் சிக்கல்?

இந்த நில மோசடி காலத்தில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.பி.உதயகுமார். ஆர்டிஓவுக்கு அரசு ஆவணங்களைத் திருத்த அங்கீகாரம் அளிப்பதுபோல் அளித்துவிட்டு, தங்களது காரியங்களைச் சாதித்துக்கொள்ளத் திட்டமிட்டதே அவர்தான் என்று ஒரு புகார் கிளம்பியிருக்கிறது. இதே ரீதியில், மதுரை டி.குன்னத்தூர் அருகே அம்மா கோயில் என்ற பெயரில் தன்னுடைய கல்வி குழுமத்துக்காக கொஞ்சம் அரசு நிலத்தை உதயகுமார் வளைத்திருப்பதாகவும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

அரசு ஆவணங்களைத் திருத்துவது ஓபிஎஸ்சுக்கு கைவந்த கலை என்கிறார்கள் தேனி மாவட்டத்தினர். பெரியகுளம் அருகே தனது நிலத்தில் ராட்சதக் கிணறு தோண்டியபோது, சுற்றுச்சூழல் துறை விதியின்படி ஆற்றுக்கு அருகில் ராட்சத கிணறு தோண்டக்கூடாது என்பதால், அருகில் ஓடிய வறட்டாறின் பெயரையே அரசு ஆவணத்தில் வறட்டோடை என்று மாற்றியவர் ஓபிஎஸ். எனவே, தனிக்குழு அமைத்து தேனி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று ஆராய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.

இதெல்லாம் நடக்குமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in