ஜெயா டிவியில் ஓபிஎஸ் வாழ்த்துச் செய்தி: சசிகலாவுடன் ஐக்கியமாகிறாரா?

ஜெயா டிவியில் ஓபிஎஸ் வாழ்த்துச் செய்தி: சசிகலாவுடன் ஐக்கியமாகிறாரா?

24-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஜெயா தொலைக்காட்சிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த செய்தியை ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி இருப்பது சசிகலாவுடன் மீண்டும் ஓபிஎஸ் ஐக்கியமாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஜெயா டிவி அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாகவும், ‘நமது எம்ஜிஆர்’ அதிகாரப்பூர்வ நாளிதழாகவும் இருந்து வந்தது. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் கட்சியின் அறிக்கைகள் உள்பட பல்வேறு தகவல்கள் ஜெயா டிவியில்தான் ஒளிபரப்பாகும். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கி அதிமுகவை இரண்டாக பிரித்தார். இதைத் தொடர்ந்து, ஜெயா டிவி, ‘நமது எம்ஜிஆர்’ நாளிதழ் நிர்வாகம் சசிகலாவிடம் சென்றுவிட்டது. இதையடுத்து, ஓபிஎஸ் செய்திகள் ஜெயா டிவியில் நிறுத்தப்பட்டது.

இதன் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, ஆட்சிப் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். சிறைக்கு சென்ற சில மாதங்களில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் கூட்டணி சேர்ந்து சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கினர். இதன் பின்னர் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவுடன் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்த நிலையில், ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் ஜெயா டிவி 24-வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்தது. அதற்காக பல்வேறு அரசியல் பிரபலங்களின் வாழ்த்துகள் சிறப்பு பேட்டியாக ஒளிபரப்பப்பட்டது. அதில் ஓபிஎஸ்ஸின் சிறப்பு பேட்டியும் வெளியானது. 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஓபிஎஸ் பேட்டி ஜெயா டிவியில் ஒளிபரப்பாகி இருப்பது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில் ஓபிஎஸ் கூறுகையில், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெயா தொலைக்காட்சி, 23 ஆண்டுகள் தனது வெற்றி பயணத்தை நிறைவு செய்து, 24-வது ஆண்டாக தனது வெற்றி பயணத்தை தொடர்கிறது. இந்த தருணத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து நிலைகளிலும் ஜெயா தொலைக்காட்சி உடனுக்குடன் செய்திகளை முந்தித் தருவதில் முன்னணி தொலைக்காட்சியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இதன் வெற்றி பயணத்தில் 23 ஆண்டுகள் உழைத்திருக்கும் தொலைக்காட்சியின் அனைத்து நிலையிலும் பணியாற்றிக்கொண்டிருக்கும் அனைத்து பணியாளர்களுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

ஜெயா டிவியில் ஓபிஎஸ் வாழ்த்துச் செய்தி ஒளிபரப்பாகியுள்ள நிலையில், சசிகலாவுடன் மீண்டும் இணைந்து செயல்படுவாரா என்ற கேள்வி கட்சிக்குள்ளும், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. எல்லாம் ஓபிஎஸ் கையில்தான் இருக்கிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in