வானகரத்தில் குவியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்... அமைதியாக நடக்குமா அதிமுக பொதுக்குழு?

வானகரத்தில் குவியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்... அமைதியாக நடக்குமா அதிமுக பொதுக்குழு?

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரத்தில் உள்ள மண்டபத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது. பாதுகாப்புக்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் அளித்த அனுமதியை அடுத்து வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது. ஒற்றைத் தலைமை தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று ஈபிஎஸ் தரப்பு வலியுறுத்தி வந்த நிலையில், உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், ஓபிஎஸ் தரப்பு குஷியாகியுள்ளது. 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் உயர் நீதிமன்றம் நேரிடையாக தலையிட்டு முக்கிய உத்தரவை பிறப்பிக்கலாம்.

இப்படி பரபரப்பான சூழ்நிலையில் இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு உறுப்பினர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் வானகரம் பரபரப்புடன் காணப்படுகிறது. நேற்று பேரணியாக சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கிருந்த பொதுக்குழு பேனர்களை கிழித்து எறிந்தனர். இதனால், பதற்றம் நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

பொதுக்குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருவாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பால் அவர் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகிறார். இதனிடையே, பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றபோது வாகனங்களை மறித்து ‘ஓபிஎஸ் வாழ்க’ என தொண்டர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வேடமணிந்து தொண்டர்கள் உற்சாகமுடன் இருக்கின்றனர். பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல இல்லத்திலிருந்து புறப்பட்டவுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படவுள்ளது.

இதனிடையே, "நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் பற்றவைத்துள்ளார். மொத்தத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் அமைதியாக நடைபெறுமா அல்லது பிரச்சினை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in