சூடுபிடிக்கும் `ஒற்றைத் தலைமை'... தனித்தனியாக ஆலோசிக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்: அதிமுகவில் நடப்பது என்ன?

சூடுபிடிக்கும் `ஒற்றைத் தலைமை'... தனித்தனியாக ஆலோசிக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்: அதிமுகவில் நடப்பது என்ன?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் தலைமையில் தனித்தனியே ‘ஒற்றைத் தலைமை’ குறித்து ஆலோசனை நடைபெற்று வருவது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 23-ம் தேதி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து இருதரப்பினரும் தங்கள் வாதத்தை முன்வைத்தனர். கட்சியில் முடிவு எடுப்பதிலும், வளர்ச்சிப் பணிகளுக்கும் ஒற்றைத் தலைமை அவசியம் என அவர்கள் வலியுறுத்தினர். பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகப் பேசிய நிலையில் இருதரப்பினரும் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தி வருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமையைக் கொண்டு வரும் விதமாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது வீட்டில் நேற்று இரவு ஆலோசனை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், மணிகண்டன், ஆர்.வி. உதயகுமார், வைத்தியலிங்கம் ஆகியோர் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஒற்றைத் தலைமை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்தியலிங்கம், ”ஒன்றைத் தலைமை குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. வேறு விஷயமாகத்தான் ஓபிஎஸ் உடனான சந்திப்பு நடந்தது. தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் அவரவர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். சிலர் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றார்கள். இப்போது போல இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் எனச் சிலர் சொன்னார்கள். ஒருசிலர் ஓபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என்றும் சிலர் ஈபிஎஸ் தலைமை ஏற்க வேண்டும் என தங்களது கருத்தைத் தெரிவித்தார்கள்” என்றார்.

இதைத் தொடர்ந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதனால் அதிமுகவில் பெரும் சலசலப்பு நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in