வலதுபக்கம் ஓபிஎஸ், இடதுபக்கம் ஈபிஎஸ், நடுவில் ஆளுநர் ரவி: ஒரே மேஜையில் நடந்த தேநீர் விருந்து

வலதுபக்கம் ஓபிஎஸ், இடதுபக்கம் ஈபிஎஸ், நடுவில் ஆளுநர் ரவி: ஒரே மேஜையில் நடந்த தேநீர் விருந்து

ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் தேநீர் விருந்தில் ஒரே மேஜையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அமரவைத்துவிட்டார் ஆளுநர் ரவி.

2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையுடன் ஜனவரி மாதம் 09ம் தேதி தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு, திராவிட மாடல் உள்ளிட்ட வரிகளை புறக்கணித்தார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் திடீரென வெளியேறினார்.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பொங்கல் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, நாதஸ்வரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கலைஞர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், "தமிழர்களின் பாரம்பரியத்தையும், நமது வீரத்தையும் பொங்கல் பண்டிகை வெளிக்காட்டுகிறது. அதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. விவசாயிகள் தங்கள் தெய்வங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பெருவிழாவையொட்டி நடைபெற்ற கலாச்சார கலை நிகழ்ச்சிகள் மூலம் ஆளுநர் மாளிகை மினி தமிழ்நாடு போலவே காட்சியளிக்கிறது” என்றார்.

ஆளுநர் அழைத்த பொங்கல் விழாவில் முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ், பாஜக பிரமுகர்கள் பங்கேற்றனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக ஆளுநருக்கு மரியாதை செலுத்தி பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னர் ஆளுநர் அவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். ஒரே மேஜையில் எடப்பாடி பழனிசாமி இடதுபக்கமும், ஓ.பன்னீர்செல்வம் வலதுபக்கமும், நடுவில் ஆளுநர் ரவியும் அமர்ந்திருந்தனர். ஒரே மேஜையில் எதிரும் புதிருமாக இருக்கும் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆகியோரை அமரவைத்துவிட்டார் ஆளுநர் ரவி.

அதே நேரத்தில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆளுநரின் பொங்கல் விழாவை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் புறக்கணித்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய பொங்கல் விழா அழைப்பிதழில், தமிழ்நாடு அரசின் இலச்சினை இடம்பெறாமல், மத்திய அரசின் சிங்க இலச்சினை மட்டுமே இடம்பெற்றிருந்தது. ஆனால் நேற்று நடந்த பொங்கல் விழாவில் தமிழ்நாடு என்றும் தமிழக அரசின் இலச்சினையும், மத்திய அரசின் சிங்க இலச்சினையும் இருந்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in