இபிஎஸ் அருகே ஓபிஎஸ்சுக்கு இருக்கை: அதிமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் திமுக!

இபிஎஸ் அருகே ஓபிஎஸ்சுக்கு இருக்கை: அதிமுகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் திமுக!

ஓபிஎஸ், ஈபிஎஸ் கடிதங்கள் குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், அவர்களுக்கு அருகருகே இடங்கள் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் அக்.17-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் சட்ட பேரவைத் தலைவருக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நானே நீடிக்கிறேன். அதிமுகவின் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பாக ஏதாவது கடிதம் கொடுக்கப்பட்டால், அது தொடர்பாக எனது கருத்தைக் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ எனத் தெரிவித்திருந்தார்.

அதேபோல எடப்பாடி பழனிசாமியும், சட்டப்பேரவைத் தலைவருக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தார். 'அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டு விட்டார். அதனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஆர்.பி உதயகுமாருக்கு வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார். பொதுக்குழு முடிவுற்ற நிலையில் ஏற்கெனவே இருதரப்பிலிருந்தும் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவுக்குக் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இருதரப்பிலிருந்தும் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அவர்கள் அனுப்பிய கடிதத்தை இன்னும் படிக்கவில்லை. அதன் பிறகு முடிவு எடுக்கப்படும் என அப்பாவு தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக மூக்கை நுழைக்காமல் வேடிக்கை பார்க்க விரும்புகிறது. அதனால் வழக்குகளைக் காரணம் காட்டி அவர்களின் கடிதத்தின் மீது எவ்வித முடிவையும் அப்பாவு எடுக்க மாட்டார் எனத் தெரிகிறது. இந்நிலையில் 17-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஓபிஎஸ் அருகில் தான் அமரக் கூடாது என்ற முடிவில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகின்றன.அதனால் இந்தக் கூட்டத்தொடரில் அவர் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in