`ஓபிஎஸ் எதையும் மறைக்கவில்லை'- போடி வாக்காளரின் மனு தள்ளுபடி

`ஓபிஎஸ் எதையும் மறைக்கவில்லை'- போடி வாக்காளரின் மனு தள்ளுபடி

போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி போடி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட்டு வெற்றிபெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ்ச்செல்வனைவிட 11 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் போடிநாயக்கனூர் தொகுதியில் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என போடி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், "கடந்த ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ப.ரவீந்திரநாத் ஆகியோர் தங்கள் சொத்து, கடன் உட்பட பல்வேறு விவரங்களை மறைத்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவுக்கு பதில் அளித்த ஓபிஎஸ் தரப்பு, "வேட்பு மனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை" என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த மனு நீதிபதி பாரதிதாசன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "வேட்பு மனுவில் சொத்து மற்றும் கடன் விவரங்களை மறைத்துள்ளதாக கூறுவது தவறு. அனைத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளோம். எந்த தகவலையும் மறைக்கவில்லை. ஏதேனும் விவரங்களை மறைத்து இருந்தாலும் வேட்பு மனு அப்போதே நிராகரிக்கப்பட்டு இருக்கும். நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

வாக்காளர் மிலானி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனைவி பெயரில் உள்ள பங்களா குறித்த தகவல்களை ஓபிஎஸ் தனது வேட்பு மனுவில் மறைத்துவிட்டதாக தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வாக்காளர் மிலானியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in