ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடர்கிறார்: உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் திடீர் பல்டி

ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடர்கிறார்: உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் திடீர் பல்டி

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று ஈபிஎஸ் கூறிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடர்கிறார் என்று திடீரென பல்டி அடித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் வரும் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறுகிறது என்று கட்சியின் தலைமை கழக செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்புக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய தனி நீதிபதி, பொதுக்குழுவை கூட்ட அதிமுக தலைமை நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதா? எத்தனை நாட்களுக்கு முன் பொதுக்குழு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

அதன்படி, வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் நீடிக்கின்றனர் என்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்ட நாேட்டீஸ் அனுப்ப முடியாது என்றும் ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதி கூறுகிறது. தலைமைக் கழக நிர்வாகிகள் பதவியில் நீடிக்கின்றனர். 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து முடிவு எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,190 பேர் ஜூலை 11-ல் பொதுக்குழு நடத்த சம்மதம் கூறுகின்றனர். எந்தவித இடையூறும் இல்லாமல் பொதுக்குழுவை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ஜூலை 11-ல் பொதுக்குழு நடைபெறும் என்று கட்சி விதிப்படிதானே அறிவித்திருக்க வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்புக்கு கேள்வி எழுப்பினார். உயர் நீதிமன்றத்தில் இருதரப்புக்கும் இடையே பரபரப்பு வாதங்கள் நடந்து வருகிறது. முடிவில் தனி நீதிபதி அளிக்கும் தீர்ப்பை பொறுத்தே அதிமுகவின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பை அதிமுகவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in