
தேர்வுக் கட்டண உயர்வு என்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது திமுக. இந்த வாக்குறுதியையையே இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் கல்லூரி மாணவர்களின் தேர்வுக் கட்டணங்களை இரண்டு, மூன்று மடங்காக உயர்த்த வழிவகை செய்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இப்போதுதான் கரோனா தீவிரம் குறைந்து ஓரளவு இயல்புநிலை திரும்பி, அனைவரும் பணிக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இருந்தும் இயல்பான வாழ்க்கை அமைய இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் எனும் நிலையில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட பெரும்பாலான கட்டணங்கள் இரண்டு, மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. சில இனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கூடவே, “இந்தத் தேர்வுக் கட்டண உயர்வு தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்ற அச்சமும் மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோரின் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அரசு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றும் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.