`அரசியலில் இருந்து விலகுகிறேன்; நிரூபிக்கத் தயாரா?'- எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் பகிரங்க சவால்

`அரசியலில் இருந்து விலகுகிறேன்; நிரூபிக்கத் தயாரா?'- எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் பகிரங்க சவால்

"முதல்வர் ஸ்டாலினை நான் சந்தித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார். நிரூபிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகத் தயாரா?" என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். 2 பேரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக தனது ஆதரவாளரான ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவிடம் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடிதம் கொடுத்திருந்தனர். தங்களை ஆலோசிக்காமல் எந்த முடிவுக்கும் எடுக்கக்கூடாது என பதிலுக்கு ஓபிஎஸ் தரப்பும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் துணை தலைவர் விவகாரம் குறித்து ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, கேள்வி நேரம் முடிந்தவுடன் உங்களுக்கு பேச அனுமதி அளிக்கப்படும் என்று கூறினார். அதனை ஏற்காத ஈபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் சட்டப்பேரவைக்கு உள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்கள் அவை காவலராக வெளியேற்றப்பட்டனர். இதனிடையே, சட்டப்பேரவை சபாநாயகர் செயலை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார் ஈபிஎஸ். இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து தடையை மீறி ஈபிஎஸ் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் ஸ்டாலினும் ஓபிஎஸ்சும் அரை மணி நேரம் சந்தித்து பேசினார்கள் என்றும் இந்த முயற்சிகள் எல்லாம் பச்சையாக தெரிகிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தேவர் தங்கக் கவசம் விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் நாங்கள் முடிவு எடுப்போம் என்றார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சில பேர் நீதிமன்றத்திற்கு போவதற்கும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு முடிகின்ற வரையில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.

திமுகவின் பி டீமாக நீங்கள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ், பி டீம் என்றால் என்ன என்று எனக்கு புரியவில்லை. முதலமைச்சர் ஸ்டாலினை நான் சந்தித்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகத் தயார். நிரூபிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலகத் தயாரா என்று கேட்டிருக்கிறேன். அதற்கு உரிய பதிலை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in