ஓபிஎஸ் தம்பியின் நகராட்சிக் கனவு பலிக்குமா?

ஓபிஎஸ் தம்பியின் நகராட்சிக் கனவு பலிக்குமா?

பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்து முதல்வரானவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் அங்கிருந்து நகர்ந்து, முதல்வர், அமைச்சர் என்றிருந்தபோது பெரியகுளம் நகராட்சித் தலைவராக அவரது தம்பி ஓ.ராஜா இருந்தார்.

2011 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் அவர் நகராட்சித் தலைவராக இருந்தாலும், அதன் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் அறிவிக்கப்படாத நகராட்சித் தலைவராக அவரே ஆளுகை செலுத்தினார். துணை முதல்வரின் தம்பி என்பதால், இவர் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினார்கள் நகராட்சி அதிகாரிகள். காண்ட்ராக்ட் தொடங்கி, பணியாளர் நியமனம் வரையில் அனைத்திலும் புகுந்து விளையாடினார் ராஜா.

ஓ.ராஜா
ஓ.ராஜா

யார் இந்த சண்முகசுந்தரம்?

இந்தச் சூழலில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சித் தலைவர் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, ஓ.ராஜா மீண்டும் போட்டியிட்டாலும் துணைத் தலைவர்தான் ஆக முடியும் என்பதால், அவர் அதை விரும்பவில்லை. எனவே, பிப்ரவரி 1ம் தேதி வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஓபிஎஸ் குடும்பத்து ஆட்கள் யாருடைய பெயரும் இடம்பெறவில்லை. ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வசிக்கும் 24வது வார்டு (தெற்கு அக்ரஹாரம்) அதிமுக வேட்பாளராக டெய்லரான பெ.ராஜேந்திரன் என்பவரே அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், இடையில் என்ன நடந்ததோ, வேட்புமனு தாக்கல் செய்ய அவர் வரவில்லை.

அந்த இடத்தில் ஓபிஎஸ்சின் கடைசி தம்பி ஓ.சண்முகசுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவின் பெரியகுளம் நகராட்சியைக் கைப்பற்றினால், அண்ணன் ஓ.ராஜா செய்த முறைகேடுகளை எல்லாம் தோண்டியெடுத்து வழக்குப் போடுவார்கள். எதற்கும் நம் குடும்பத்து ஆள் ஒருவரையும் உள்ளே அனுப்பிவைப்போம் என்று கடைசி நேரத்தில் முடிவெடுத்தே அவரை வேட்பாளராக்கினாராம் ஓ.பன்னீர்செல்வம்.

ஓபிஎஸ்சின் கடைசி தம்பியான ஓ.சண்முகசுந்தரம் அதிமுகவில் நேரடியாக எந்தப் பொறுப்பிலும் இல்லை. ஹார்டுவேர் கடை நடத்திவருபவர். சொத்து சுகத்துக்குப் பஞ்சம் கிடையாது. பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் பகுதியில் உள்ள பெரும்பான்மையான வீடுகளை ஓபிஎஸ் குடும்பத்தினரே வாங்கி, அடுத்தடுத்து பங்களா கட்டி வருவதைப் போலவே இவரும் 3 வீடுகளை வாங்கி இடித்துவிட்டு பங்களா கட்டத் தொடங்கினார். அப்போது, அருகில் உள்ள அரசு மருத்துவ தம்பதிகளான விமலா, திருமலை ஆகியோருக்குச் சொந்தமான இடம் 2 அடியை சேர்த்து ஆக்கிரமித்துக் கட்ட முயன்றார். இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் முறையிட்டுப் பலனில்லாததால், முதல்வரின் தனிப்பிரிவு வரையில் முறையிட்டு ஒருவழியாக அந்த இடத்தை மீட்டார்கள் அந்தத் தம்பதியர்.

ஓ.ராஜா போல ரவுடித்தனமோ, அதிரடி பிம்பமோ இல்லாத சண்முகசுந்தரத்துக்கு இந்தச் சம்பவம் கரும்புள்ளி போல அமைந்துவிட்டது.

மஞ்சுளா  (பச்சை சேலை கட்டியிருப்பவர்)
மஞ்சுளா (பச்சை சேலை கட்டியிருப்பவர்)

தலைவர் பதவி யாருக்கு?

பெரியகுளம் நகராட்சியைப் பொறுத்தவரையில் மொத்தம் 30 வார்டுகள் இருக்கின்றன. அதிமுக சார்பில் 30 வார்டுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் திமுகவோ வெறும் 21 வார்டுகளில்தான் போட்டியிடுகிறது. மீதி 9 வார்டுகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 3, விடுதலை சிறுத்தைகளுக்கு 4, மா.கம்யூனிஸ்ட் 1, ஃபார்வர்ட் பிளாக் 1 என்று ஒதுக்கியிருக்கிறது திமுக. 16 சீட்களில் வென்றால், நகராட்சித் தலைவர் பதவியைப் பிடித்துவிடலாம் என்பதால் ஓபிஎஸ் குடும்பம் காசை இறக்குவதற்குத் தயாராகியிருக்கிறது.

நகராட்சித் தலைவர் பதவிக்கு பெண்ணே வர முடியும் என்பதால், 3 பெண்களின் பெயர் சேர்மன் வேட்பாளர் என்று அடிபடுகிறது. முதலாவது நபர் மஞ்சுளா முருகன். ஓபிஎஸ்சைத் தெரிந்த எல்லோருக்குமே மஞ்சுளாவையும் தெரியும். அந்தளவுக்கு அவருக்கு நெருக்கமானவர். அதிமுக மாவட்ட துணை செயலாளர்கள், மகளிரணி நிர்வாகி என்று இரட்டைப் பொறுப்பை வகிப்பவர் அவர்.

இதுதவிர 29வது வார்டில் போட்டியிடும் முத்துலட்சுமி (இயக்குநர் பாலாவின் அண்ணி), நகர் துணை செயலாளரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான அப்துல் சமதுவின் மனைவி ஆகியோரும் தலைவர் போட்டியில் இருக்கிறார்கள்.

இவர்களில் கவுன்சிலர் தேர்தலில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே, தலைவர் பதவிக்கான கோதாவில் இறங்க முடியும் என்பதால் ஒவ்வொருவரும் மற்றவர்களை தோற்கடிப்பதற்கான ஏற்பாடுகளையும் மறைமுகமாகச் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த 3 பேரில் மஞ்சுளாவுக்கும், முத்துலட்சுமிக்கும்தான் ஓபிஎஸ் குடும்ப ஆதரவு இருக்கிறது. மஞ்சுளாவை வழக்கம்போல ஓபிஎஸ் ஆதரிப்பார் என்றும், முத்துலட்சுமியை ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரிப்பார் என்றும் சொல்கிறார்கள் தேனி அதிமுகவினர். மஞ்சுளாவின் உறவை எப்படியாவது துண்டித்துவிட வேண்டும் என்று ஓபிஎஸ் குடும்பத்தினர் திட்டமிடுவதால், அது மஞ்சுளாவுக்குப் பாதகமாக முடியலாம். யார் ஜெயித்தாலும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றும் ஓபிஎஸ்சின் தம்பி ஓ.சண்முகசுந்தரத்துக்கு கட்டுப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் கிசுகிசுக்கிறார்கள் அதிமுகவினர்.

வெற்றி வாய்ப்பு எப்படி?

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் அதிமுகவுக்கு கொஞ்சம் வெற்றிவாய்ப்புள்ள ஒரே நகராட்சி பெரியகுளம்தான். ஓபிஎஸ் தன்னுடைய வீடிருக்கும் சொந்த வார்டில் கட்சியை தோற்க விடமாட்டார், தம்பியை தோற்க விடமாட்டார் என்கிறார்கள் கட்சியினர். ஆனால், வார்டு முழுக்க ஓபிஎஸ் சொத்தாகவே இருப்பதால், அந்தப் பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதேநேரத்தில், சண்முகசுந்தரத்தை எதிர்த்து நிற்கிற திமுக வேட்பாளரும் ஓபிஎஸ்சின் சொந்தக்காரர்தான் என்கிறார்கள். எல்லாம் பேசிவைத்துத்தான் நிறுத்தியிருப்பதாகவும் சொல்கிறார்கள். எனவே, மக்கள் வெறுப்படைந்து சுயேச்சை வேட்பாளரை ஜெயிக்க வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பெரியகுளம் நகராட்சியைப் பொறுத்தவரையில் தாழ்த்தப்பட்டோரும், இஸ்லாமியர்களும்தான் அதிகம். அவர்கள் அரசியல் ரீதியாக வாக்களித்தால் திமுக வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம். பணத்துக்காக வாக்களித்தால் அதிமுகவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

திமுக குறைந்த எண்ணிக்கையில் போட்டியிடுவது அக்கட்சிக்குப் பாதகமாக முடியலாம். 5 வார்டுகளில் பாஜக போட்டியிடுவது அதிமுகவுக்கும், 5 வார்டுகளில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுவது திமுகவுக்கும் பாதகத்தை ஏற்படுத்தக்கூடும். அமமுக வேட்பாளர்கள் 12 பேர் களமிறங்கியிருக்கிறார்கள். அவர்கள் அதிமுக வாக்கை பிரிப்பார்களா, திமுக வாக்கைப் பிரிப்பார்களா? என்றே தெரியவில்லை. இந்த நகராட்சி, திமுக மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் கட்டுப்பாட்டில் வருவதால், அரசியல் அதிரடிகளுக்குப் பஞ்சமிருக்காது என்று தெரிகிறது. எப்படியோ பெரியகுளம் நகராட்சியின் தேர்தல் முடிவை தமிழகம் உற்றுநோக்குகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in