சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த தவறும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 முதல் 2006ம் ஆண்டு வரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில், வருவாய்துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 2006ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்தது.
ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. சிவகங்கை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையை ஏற்று, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கடந்த 2012ம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பன்னீர் செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதில் எந்த தவறும் இல்லை என வாதிட்டார். மேலும் விசாரணைக்கு பின் வழக்கை முடித்து வைக்க லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ததிலும் தவறில்லை என வாதிட்டார். விசாரணையில் புதிய சாட்சிகள் ஆவணங்களை விசாரித்து தான் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு தலைமை வழக்கறிஞர் தலைமை குற்றவியல் வழக்கறிஞரின் ஆலோசனைகள் பெற்ற பிறகு வழக்கை முடித்து வைக்க கோரி லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
காவல்துறை வழக்கை முடித்து வைப்பதாக கூறி அறிக்கை தாக்கல் செய்யும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் காரணம் எதுவும் கூறத் தேவையில்லை. தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், 11 ஆண்டுகளுக்கு பின் எடுக்க வேண்டுமா?. உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டியே சிவகங்கை நீதிமன்றம் வழக்கை முடித்து வைக்க லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையை ஏற்றுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது என்று வாதங்களை முன் வைத்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்தி வைத்தார்.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!
50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!
அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!
அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!