டிச.21-ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஓங்கி அடிக்கும் ஓபிஎஸ் அணி

டிச.21-ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: ஓங்கி அடிக்கும் ஓபிஎஸ் அணி

அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் டிச.21-ம் தேதி அன்று நடைபெறும் என ஓபிஎஸ் தனி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈபிஎஸ் அணி,  ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  என தமிழக அதிமுக பல கூறுகளாக பிரிந்து கிடக்கிறது. இந்த  நிலையில்  தாங்கள்தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்க ஆளாளுக்கு ஒரு முடிவை எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஆனாலும் கட்சியின் பெரும்பாலான மாவட்ட கழக செயலாளர்களும்,  பொதுக்குழு உறுப்பினர்களும் ஈபிஎஸ் தரப்பிற்குத்தான் ஆதரவாக  இருக்கிறார்கள். அதனால் அவர்கள் அணியே மிக வலுவான அணியாக இருக்கிறது. அதிமுகவாக தமிழக களத்தில் அந்த அணி களமாடிக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியானது.  ஒன்றிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். அப்படி தமிழக முழுவதும் தங்கள் ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக ஓபிஎஸ் நியமித்துள்ள நிலையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தற்போது கூட்டியுள்ளார். 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் டிச. 21-ம் தேதி நடைபெறும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே ஓபிஎஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in