ஐஏஎஸ் அதிகாரி முதல் அரசியல்வாதி வரை..!- யஷ்வந்த் சின்ஹா கடந்து வந்த பாதை

ஐஏஎஸ் அதிகாரி முதல் அரசியல்வாதி வரை..!- யஷ்வந்த் சின்ஹா கடந்து வந்த பாதை

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் யஷ்வந்த் சின்ஹா. இவர் இன்று காலை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது, சின்ஹாவுடன் காங்கிரஸின் தலைவர்கள் ராகுல்காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ் உள்ளிட்டோர் இருந்தனர். மொத்தம் 17 எதிர்கட்சிகளின் ஆதரவு யஷ்வந்திற்கு கிடைத்துள்ளது.

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் தன் ஆதரவை சின்ஹாவிற்கு அளித்துள்ளார். அவரது கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் மனு தாக்கலுக்கு வந்திருந்தார். திமுகவின் சார்பில் மக்களவை எம்பியான ஆ.ராசா இருந்தார். தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, ராஷ்டிரிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் தலைவர் லாலுவின் மகளான மிசா பாரதி உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர்.

நாடாளுமன்றத்திலுள்ள தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்புமனு தாக்கலுக்கு பின் சின்ஹா, வளாகத்திலுள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். அடுத்த மாதம் ஜுலை 18-ல் நடைபெறவிருக்கும் குடியரசு தலைவர் தேர்தலுக்காக திரெளபதி முர்மு கடந்த வெள்ளிக்கிழமை தன் மனுவை தாக்கல் செய்திருந்தார். முர்முவை எதிர்க்கும் யஷ்வந்த் சின்ஹா, பாஜகவிலிருந்து தன் அரசியலை தொடங்கியவர். பிஹாரின் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் பற்றி பல விவரங்கள் வெளியாகி உள்ளன.

நவம்பர் 6, 1937-ல் பிஹாரின் பக்ஸரின் பந்தியாபாட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தான் பட்டம் பெற்ற பாட்னா பல்கலைக்கழகத்தில் 1958 முதல் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1960-ல் அம்மாநில ஐஏஎஸ் அதிகாரியாகி சொந்த மாநிலத்திலேயே பணி செய்துவந்தார். அப்போது முதல்வராக இருந்த மஹாமாயா பிரசாத்துடன் பொதுமக்கள் முன் நிகழ்ந்த நேரடி மோதலால் முதன்முறையாகப் பிரபலமானார் யஷ்வந்த் சின்ஹா. தன் 24 வருட ஐஏஎஸ் பணியில் மத்திய வர்த்தகத்துறையிலும், ஜெர்மனியின் இந்திய தூதரக அலுவலகத்திலும் பணியாற்றினார்.

பிரதமராக இருந்த வி.பி.சிங், 1989-ல் கேபினட் செயலாளரான யஷ்வந்த் சின்ஹாவை மத்திய இணை அமைச்சராக்க விரும்பினார். இதை ஏற்க மறுத்த யஷ்வந்த், 1990-ல் சந்திரசேகர் பிரதமரான போது அவரால் மத்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். இப்பதவி அவருக்கு 223 நாள் மட்டும் நிலைத்தது. 1996-ல் பாஜகவில் இணைந்த யஷ்வந்த் சின்ஹா, அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரானார்.

இதையடுத்து பாஜக தலைமையில் ஆட்சி அமைத்த பிரதமர் வாஜ்பாய்க்கு சின்ஹா மிகவும் நெருக்கமானார். இதனால், அவருக்கு வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பிறகு வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2004-ல் ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் அதே தொகுதியில் 2009-ல் வெற்றி பெற்றார். 2014-ல் நடந்த தேர்தலில் தனது மகனான ஜெயந்த் சின்ஹாவிற்கு வழிவிட்டார்.

பிறகு, பிரதமர் நரேந்திர மோடியுடனான மனக்கசப்பால், ஏப்ரல் 21, 2018-ல் பாஜகவிலிருந்து விலகினார். அக்டோபர் 2018-ல் பிரதமர் மோடி ஆட்சியில் ரபேல் ஊழல் நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். கடந்த வருடம் மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சியில் சேர்ந்த சின்ஹாவிற்கு தேசிய துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டது. சின்ஹாவை எதிர்கட்சிகள் பொது வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாக கட்சியிலிருந்தும் விலகி விட்டார் யஷ்வந்த் சின்ஹா. இவரது வெற்றி வாய்ப்பு குறைவு என்றாலும், 2024 மக்களவை தேர்தலில் எதிர்கட்சிகள் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் வாய்ப்பு யஷ்வந்திற்கு கிடைத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in