இது நவீன தீண்டாமை: பட்டியலின பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண அறிவிப்பால் கொந்தளிக்கும் கட்சிகள்!

பட்ஜெட் தாக்கல் செய்யும் ரங்கசாமி
பட்ஜெட் தாக்கல் செய்யும் ரங்கசாமிஇது நவீன தீண்டாமை: பட்டியலின பெண்களுக்கு பேருந்தில் இலவச பயண அறிவிப்பால் கொந்தளிக்கும் கட்சிகள்!

பட்டியலின பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என்கிற புதுச்சேரி அரசின் பட்ஜெட் அறிவிப்பிற்கு பட்டியலின மக்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனமும், அதிருப்தியும் எழுந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமியால் நேற்று பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பட்டியல் இனப்பெண்கள் பயணிப்பதற்கு கட்டணம் இல்லை என்கிற அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். இதற்கு பட்டியல் இன மக்கள் தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

காரைக்கால் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின்  பொதுச் செயலாளர் ஜெ. சூர்யா  இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தீண்டாமை ஒழிப்பில் மிகப்பெரும் பங்காற்றுவது திரையரங்குகள் மற்றும் பேருந்துகள், இவற்றில் சாதி பார்த்து யாரும் அமர முடியாது. சாதி பார்த்து அருகில் நிற்க முடியாது.  இங்கு எமது சமூக மக்கள் சமநிலையில் கருதப்பட்டு வாழ்ந்து வந்த நிலையில் தற்பொழுது நவீன தீண்டாமையாக  2023-24 பொது பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் பட்டியலின பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு எங்கள் சமூகத்தை மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்தி இழிவுபடுத்துவதாக கருதுகிறோம். மேலும் எமது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பு இந்த திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. தற்பொழுது முற்போக்கு தனமாக  மாறிவரும்  சமூக சூழலில் இதுபோன்ற திட்டங்கள் பிற்போக்குத் தனமானவையாகவே இதை நாம் பார்க்கிறோம்.  

ஆகவே புதுவை முதல்வர் உடனடியாக இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும். மேலும் ஆதிதிராவிடர்  சிறப்பு கூறு நிதியை போக்குவரத்து துறைக்கு மறைமுகமாக ஒதுக்கீடு செய்வதற்காகவே இந்த திட்டத்தை அறிவித்திருப்பதாக நாம் கருதுகிறோம். ஆகவே பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்படுகின்ற சிறப்பு கூறுநிதியை அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த நிதியை மடைமாற்றம் செய்வார்களேயானால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்' என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சியைச் சேர்ந்த விடுதலைகனல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   'இது அரசாங்கமே நடத்துகிற நவீன தீண்டாமை ஆகும். குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெண்களுக்கு மட்டும் பயண சீட்டு இலவசம் என்று அறிவித்திருப்பது அங்கே மிகப் பெரிய சாதிய தீண்டாமையை உருவாக்கும்.

அனைவரும் சமத்துவத்தோடு பயணிக்கிற பேருந்தில் சாதி பார்த்து இலவசம் என்று சொன்னால் பட்டியலின சமூகத்தை எப்படி நீங்கள் கண்டறிந்து இலவச பயண சீட்டு கொடுப்பீர்கள்?  அப்படி என்றால் பட்டியலின சகோதரிகள் பேருந்தில் பயணம் செய்வதற்காக சாதி சான்றிதழ் எடுத்து வர முடியுமா என்ன?இந்தத் திட்டத்தினை உடனடியாக ரத்து செய்வதோடு பயணிக்கிற அனைத்து பெண்களுக்கும் பயண சீட்டு இலவசம் என்று இந்த அரசு அறிவிப்பு செய்ய வேண்டும்' என்று கோரியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in