விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: மாநிலங்களவை ஒத்திவைப்பு!

விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்: மாநிலங்களவை ஒத்திவைப்பு!

அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் தேர்தலுடன் நேற்று தொடங்கியது. இந்த நிலையில், நாட்டில் வேகமாக அதிகரித்துவரும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் பங்கேற்றுள்ளார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள எம்.பிக்கள், “அதிக பணவீக்கம், தொடர்ச்சியான விலைவாசி உயர்வு ஆகியவை சாதாரண குடிமக்களை மோசமாக பாதிக்கின்றன. ஒரு சிலிண்டரை ரூ.1053 க்கு வாங்கி எப்படி சாதாரண குடிமகனால் வாழ்க்கை நடத்த முடியும்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக நின்று, அத்தியாவசியப் பொருட்களின் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பினர். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து இரு அவைகளிலும் கடும் அமளி நிலவியது.

முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டம் மற்றும் மத நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என நாடாளுமன்ற செயலகம் அறிவித்தது. இதனை மீறி இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன.

இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் சிலிண்டர் விலை, உணவுப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in