அணிமாறிய எதிர்க்கட்சியினர்... செல்லாத ஓட்டுபோட்ட மக்கள் பிரதிநிதிகள்: எப்படி வென்றார் திரௌபதி முர்மு?

அணிமாறிய எதிர்க்கட்சியினர்... செல்லாத ஓட்டுபோட்ட மக்கள் பிரதிநிதிகள்: எப்படி வென்றார் திரௌபதி முர்மு?

இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக வாகை சூடியுள்ளார் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு. இந்த வெற்றியின் மூலமாக நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக வரும் ஜூலை 25-ம் தேதி ஜனாதிபதியாகிறார்.

குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை 18-ம் தேதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 30 மையங்களில் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு எம்.பியின் வாக்கு மதிப்பு 700 என நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் எம்.எல்.ஏக்களின் வாக்குமதிப்பு மாநிலங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச எம்எல்ஏக்களின் வாக்குமதிப்பு 208 ஆகவும், தமிழகத்தை சேர்ந்த எம் எல் ஏக்களின் வாக்குமதிப்பு 176 ஆகவும் இருந்தது.

இந்த தேர்தலில் இருவர் மட்டுமே களத்தில் இருந்த காரணத்தால் மொத்த வாக்குகளில் 50% க்கும் அதிகமான வாக்குகளை பெற்றாலே வெற்றிபெறும் நிலை இருந்தது.

நான்கு சுற்றிலும் முன்னிலை வகித்த முர்மு:

எம்.பிக்களின் வாக்குகளை எண்ணிய முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் பதிவான 748 வாக்குகளில் 540 உறுப்பினர்களின் வாக்குகளை முர்மு பெற்றார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 208 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றார்.

அடுத்ததாக மாநிலப் பெயர்களின் அகர வரிசைப்படி நடந்த வாக்கு எண்ணிக்கையில், இரண்டாம் சுற்றில் மொத்தமுள்ள 1,138 எம்.எல்.ஏக்களில், திரௌபதி முர்முவுக்கு 809 வாக்குகளும், சின்ஹாவுக்கு 329 வாக்குகளும் கிடைத்தன. மூன்றாவது சுற்றில் முர்மு 812 வாக்குகளையும், யஷ்வந்த் சின்ஹா 521 வாக்குகளையும் பெற்றார். மூன்றாவது சுற்றிலேயே 50 சதவீத வாக்குகளை கைப்பற்றியதால் திரௌபதி முர்முவின் வெற்றி அப்போதே உறுதியானது.

இறுதிச்சுற்றின் முடிவில் திரௌபதி முர்மு 6, 76, 803 வாக்குகளைப் பெற்று மொத்த வாக்குகளில் 64 சதவீதத்தை கைப்பற்றி வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளைப்பெற்று 36 சதவீத வாக்குகளை கைப்பற்றினார். மொத்தம் வாக்களித்த 4,754 உறுப்பினர்களில் 2,824 பேர் திரௌபதி முர்முவுக்கும், 1,877 பேர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் வாக்களித்திருந்தனர்.

அணிமாறி வாக்களித்த எதிர்க்கட்சிகள்:

தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமின்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிளும் முர்முவை ஆதரித்தன. இது மட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள சிவசேனா மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் இவருக்கு ஆதரவு அளித்தன. நேரடி ஆதரவு மூலமாகவே 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கைவசம் இருந்ததால் திரௌபதி முர்முவின் வெற்றி தேர்தலுக்கு முன்பே நிச்சயமானது.

இந்த நிலையில் இத்தேர்தலில் பல மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அணிமாறி பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.பிக்கள் மற்றும் 125 எம்எல்ஏக்கள் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். அசாமில் 22 பேர், மத்தியபிரதேசத்தில் 20 பேர், குஜராத்தில் 10 பேர், பீகாரில் 6 பேர், சத்தீஸ்கரில் 6 பேர் மற்றும் கோவாவில் 4 பேர் முர்முவுக்கு வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக முர்முவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

செல்லாத வாக்குகளை பதிவு செய்த மக்கள் பிரதிநிதிகள்:

இந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் 53 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மொத்தம் பதிவான 4,754 வாக்குகளில் 4,701 வாக்குகள் மட்டுமே செல்லத்தக்கவையாக இருந்தன. செல்லாதவையில் 15 வாக்குகள் எம்.பிக்கள் செலுத்தியது ஆகும். இந்த தேர்தல் வாக்குச்சீட்டு முறையில்தான் நடைபெற்றது. இதற்கு வாக்களிக்க ஒவ்வொரு கட்சியும் பயிற்சியும் அளித்தன. அப்படியிருந்தும் மக்கள் பிரதிநிதிகளே செல்லாத வாக்குகளை பதிவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தலா 5 உறுப்பினர்கள் செல்லாத வாக்குகளை பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒரு உறுப்பினரும் செல்லாத வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in