சட்டம் - ஒழுங்கு: சாட்டையைச் சுழற்றுவாரா ஸ்டாலின்?

கோவையில்  கார் சிலிண்டர்  வெடித்த இடத்தில்...
கோவையில் கார் சிலிண்டர் வெடித்த இடத்தில்...

எப்போதும் தமிழக அரசை கடுமையாக தாக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கி,  உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருக்கும் தேமுதிக விஜயகாந்த் வரைக்கும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் அத்தனை பேரும் ஒருமித்த குரலில் “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு” என சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், கோவையில் நடந்திருக்கும் பயங்கரவாத சம்பவங்கள்!

எதிர்க்கட்சிளுக்கு வேறு வேலையே இல்லை என இதை எளிதில் கடந்துபோய் விட முடியாது.  காரணம், கனியாமூர்  பள்ளி கலவரம், ஆ.ராசாவின் சர்ச்சைப் பேச்சைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள், தற்போது கோவையில் சிலிண்டர் குண்டு வெடிப்பு - இந்த மூன்றும்  தமிழக  காவல் துறையின் செயல்பாடுகளை கேள்விக்குறியாக்கி விட்டன. இவை தவிர, தினமும் நடக்கும் பத்துக்கும் மேற்பட்ட கொலைகள், காவல் நிலைய மரணங்கள், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்  உள்ளிட்டவையும்  தமிழகம் அமைதிப் பூங்காதானா என்ற கேள்வியை சாமானியனுக்குள்ளும் எழுப்பவே செய்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டும் சேர்ந்தே வந்துவிடும்  என்று மக்கள்  வேடிக்கையாகப் பேசுவது போலவே திமுக ஆட்சியில்  சட்டம் - ஒழுங்கும் சீர்குலைந்துவிடும் என்பதும் பொதுக்கருத்தாக உருவாகி இருக்கிறது. ஏனெனில், மக்களின்  கடந்த கால அனுபவங்கள் அப்படி இருக்கின்றன. 

1990-ல் சென்னையில் பட்டப்பகலில் இலங்கையின் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட 13 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். 1998-ல் கோவையில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தன.  2006  உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு காணாத  வன்முறை. 2008-ல்  சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்.  2009-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது நடைபெற்ற  தாக்குதல் என திமுக ஆட்சி காலங்களில்  சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு நின்றதற்கு  பல உதாரணங்கள் இருக்கின்றன. 

அந்த வகையில் தற்போது கோவையில் நடந்திருக்கும் சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் திமுக ஆட்சி மீதான பார்வையையே மாற்றியிருக்கிறது என்று சொல்லலாம். 

தீபாவளிக்கு முதல் நாள் கோவையின் முக்கிய வணிகப் பகுதியில் இந்த சிலிண்டர் குண்டு வெடித்திருந்தால் அதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது என்கிறார்கள் கோவை மக்கள். மத நோக்கில் இதை மென்மையாக  பார்க்காமல் தீவிரவாத நோக்கில் கடுமையாக  பார்த்தால் தான் இவற்றை  முன்கூட்டியே கண்டறிய முடியும்;  கட்டுப்படுத்தவும் முடியும். அந்த விதத்தில் கோவை சம்பவத்தில் உளவுத்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வில்லை என்பதே பலதரப்பிலுமிருந்து வைக்கப்படும் முக்கிய குற்றசாட்டு. அது உண்மையும்கூட.

அதேசமயம், சம்பவம் நடந்த பிறகு அதுபற்றிய வதந்திகள் பரவிவிடாமல் இருக்க காவல் துறையும் உளவுத்துறையும் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பானது. சிலிண்டர் குண்டு வெடித்த ஏரியாவை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றியதுடன்  உடனடியாக, டிஜிபி-யான சைலேந்திரபாபு,  உளவுத்துறை ஐஜி-யான செந்தில்வேலன்  உள்ளிட்டோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து,  நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அதில் சிலர் உடனடியாக  கைதும் செய்யப் பட்டார்கள். அதனால் 12  மணி நேரத்திற்குள் கோவை  இயல்பு நிலைக்குத் திரும்பியது.

ஆனாலும் எதிர்க்கட்சிகள் இதை அவ்வளவு எளிதாக  விட்டு விடுவதாக  இல்லை. தேவையற்ற  பதற்றத்தைத் தவிர்க்க சில விஷயங்களை பகிரங்கமாக வெளியில் சொல்லாமல் இருந்தது போலீஸ். ஆனால், அதையெல்லாம் பொதுவெளியில் பட்டவர்த்தனமாக போட்டுடைத்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. காவல் துறை எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையையும் தனித்தனியாகப் பட்டியலிட்டு விமர்சித்தார். இது தற்கொலை தாக்குதல் என்பது அண்ணாமலையின் குற்றச்சாட்டு. 

பாஜக மட்டுமல்லாது அதிமுக உள்ளிட்ட பிறகட்சிகளும் இதை அரசியலாக்குகின்றன. முன்பு ஸ்டாலின் சொன்னதுபோல், அவர்களெல்லாம் இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் அவியலா செய்துகொண்டிருப்பார்கள்? ஆனால், இதையெல்லாம் சமாளிக்கத்தான் திமுக அரசிடம் தகுந்த கேடயங்கள் இல்லை.

தற்போதைய சமூக ஊடக வெளிச்சத்தில் எந்த ஒரு குற்றத்தையும் யாரிடமிருந்தும் மறைத்துவிட முடியாது. அது  உடனடியாக மக்களிடம் போய் சேர்வதால் அதைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் இப்படி ஒரு தோற்றத்தை உருவாக்குவதாக திமுக தரப்பில் சொல்கிறார்கள். “தூத்துக்குடி துப்பாக்கி சூடு,  சாத்தான்குளம் லாக்கப் மரணங்கள் என தங்கள் ஆட்சியில் நடந்ததை எல்லாம்  மறைத்துவிட்டு  திமுக ஆட்சியில் தான் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அதிமுகவும் சேர்ந்து கூப்பாடு போடுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது” என்கிறார்கள் திமுக தரப்பில்.

தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு சுமார் 20 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டனர்.  அவர்களது  சொத்துகளும் முடக்கப்பட்டது. ஆபரேஷன் மின்னல் என்ற பெயரில் ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டு  சென்னையில் 1,310 பேர்  உட்பட மாநிலம் முழுவதும் ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சட்டம் - ஒழுங்கை கட்டுக்குள் வைக்க இப்படி  காவல்துறையின் நடவடிக்கைகள்  தீவிரமாகவே இருக்கின்றன. ஆனால், அதை  மென்மையான போக்கில்  செயல்படுத்துவதால் தான் சிக்கல்கள் நேர்கின்றன. அதேசமயம், பெரும்பாலான இடங்களில் உளவுத் துறையில் இருப்பவர்கள், தங்களது பொறுப்பை மறந்துவிட்டு போலீஸை போட்டுக் கொடுக்கும் வேலைகளையே பிரதானமாகச் செய்வதும் இன்னும் பிற வேலைகளைச் செய்வதும் சட்டம் - ஒழுங்கில் சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்று காக்கி உடுப்புப் போட்டவர்களே சொல்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் கட்டாய வாகனச் சோதனை செய்தாலே பெரும்பாலான குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட முடியும்; பெருங்குற்றங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்திவிட முடியும். ஆனால், அப்படியான சோதனைகளால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவிடக்கூடாது என உயர் அதிகாரிகள் உத்தரவிடுவதால் பெரும்பாலான இடங்களில் வாகன சோதனைகள் நடைபெறுவதே இல்லை. 

எல்லாவற்றுக்கும் மேலாக, வழக்கம் போல ஆட்சியின் மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை அத்தனை பேருமே காவல் துறையினரின் நடவடிக்கைகளில் தலையிடுகிறார்கள். இவர்களால் பல நேரங்களில் உயரதிகாரிகளின் கைகளே கட்டப்பட்டுவிடுகின்றன. இத்தனையும் செய்துவிட்டு, சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என நினைப்பது எப்படிச் சரியாகும்?

தனது ஆட்சியின் போது, “அதிமுகவினர் யாரும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் கட்டைப்பஞ்சாயத்துப் பேசியதாக தெரியவந்தால் உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார் ஜெயலலிதா. அதனால், அவர் நல்ல நிலையில் இருக்கும் வரை அதிமுககாரர்கள் ஸ்டேஷன் பக்கம் திரும்பிப் பார்க்கவே பயந்தார்கள். அப்படியான அறிவிப்பை வெளியிடுவதுடன் காவல் துறையினர் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான சூழலை உருவாக்க வேண்டியதும் உள் துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் முக்கிய பொறுப்பு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in