ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக அதிமுக தான் செயல்படுகிறது!

வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி
வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

திமுகவிற்கு எதிராக பல்வேறு கருத்துகளை அன்றாடம் பதிவு செய்து வரும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, “திராணி இருந்தால் தொட்டுப் பார்க்கட்டும்” என்று நேற்று பேசிய பேச்சு பாஜகவினர் மத்தியில் குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பொதுவெளியில் என்ன தாக்கத்தை உருவாக்கியுள்ளது?

பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். கடந்த 2019-ம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று 2020-ம் ஆண்டு தமிழக பாஜகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் மாநிலத் துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.

அதிரடியாக பேசக்கூடிய அண்ணாமலைக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது, " எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம். அதை இங்கே காட்ட வேண்டாம் என்று நினைக்கிறேன்" என்று கூறியதோடு செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக ஒருமையில் அண்ணாமலை பேசினார். இந்த பேச்சால் சர்ச்சை ஏற்பட்டது. கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த தேர்தலில் அண்ணாமலை தோல்வியடைந்தார்.

இந்நிலையில், பாஜக தமிழகத் தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக 7.7.2021 அன்று பதவியேற்றுக் கொண்டார். இதனால் மாநிலத் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழக பாஜக மாநிலத் தலைவரானார். அன்று முதல் திமுவையும், அதன் தலைவர்களையும் அறிக்கைகள் , பேட்டிகள் மூலம் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அத்துடன் 10 மாத கால திமுக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாக அடுக்கான குற்றச்சாட்டுக்களையும் சொல்லி வருகிறார்.

இந்த நிலையில், அண்ணாமலை நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, “அடுத்த 6 மணி நேரம் பாஜக அலுவலகத்தில் தான் இருப்பேன். முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள். தொட்டம்பட்டியில் இருந்து வந்த என்னைத் திராணி இருந்தால் தொட்டு பார்க்கட்டும்” என திமுகவிற்கு சவால் விட்டார்.

பிஜிஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக மின்சார ஒப்பந்தம் செய்துள்ளதாக திமுக மீது அண்ணாமலை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனை எதிர்த்து அந்த நிறுவனம் அண்ணாமலையிடம் 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல், “ தமிழக முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட நோக்கத்திற்காகத்தான் துபாய் செல்கிறார்” என்று அண்ணாமலை பேசியதற்காக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு திமுக அமைப்புச் செயலாளா் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பினார். அதற்கும் அண்ணாமலை கடுமையான முறையில் பதிலளித்தார்.

“திமுக போல கோழைத்தனமாக நோட்டீஸ் கொடுப்பதெல்லாம் எங்களுக்கு வராது. திமுக எம்.பி-யான வில்சன் என் மீது ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பிஜிஆர் நிறுவனம் ரூ.500 கோடி கேட்டும், ஆர்.எஸ்.பாரதி ரூ.100 கோடி கேட்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். என்னிடம் இரண்டு டப்பா, ஊரில் ஆடுகள், மாடுகள் தான் உள்ளன. இதை வேண்டுமானால் பிடித்துக்கொண்டு போங்கள்” என்று பதிலளித்தார். அவரது இந்தப் பேச்சை பாஜகவினர் ரசிக்கின்றனர். ஒரு அகில இந்திய கட்சியின் மாநில தலைவராக இருந்து கொண்டு அண்ணாமலை இப்படி பேசுவதற்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் அதிமுக எதிர்கட்சியாக இருந்தாலும், மக்கள் மன்றத்தில் அந்தக்கட்சியின் செயல்பாடு பெரிய அளவில் இல்லை. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற இருதுருவ அரசியலாலும், சசிகலாவாலும் அந்தக் கட்சி கலகலத்துக் கிடக்கிறது. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பாஜக முயற்சி செய்கிறது. அதற்காக திமுகவைக் கடுமையாக எதிர்ப்பதன் மூலம் எதிர்கட்சிக்கான இடத்தை நோக்கி வருவதற்கு பாஜக தொடர்ந்து முயற்சி செய்கிறது. அதற்கு அண்ணாமலையை பாஜக தலைமை பயன்படுத்துகிறது.

விவாத அரசியல் நடத்துவவதன் மூலம் எப்போதும் லைம் லைட்டில் இருந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக நிலை பெறப்பார்க்கிறது. ஆனால், இது அதிமுகவிற்குத் தான் பாதகமானச் சூழ்நிலையை உருவாக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

வைகைச்செல்வன்.
வைகைச்செல்வன்.

இதுகுறித்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம். தமிழகத்தில் எதிர்கட்சி இடத்தைப் பிடிக்க அண்ணாமலை மூலம் பாஜக முயற்சி செய்கிறதா என்று அவரிடம் கேட்டோம். இதற்கு வைகைச்செல்வன் பதிலளிக்கையில், “ சட்டமன்றத்தில் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக தான் எதிர்கட்சியாக உள்ளது. அத்துடன் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அதிமுகவின் தான் குரல் எதிரொலித்து வருகிறது.

தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் அதிமுக வலியுறுத்தி வருகிறது. குடும்பப் பெண்களுக்கு அறிவிக்கப்பட்ட உரிமைப்பணம் 1000 ரூபாயைத் தராமல் திமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகையை யார் வேண்டுமானாலும் வைக்கலாம் என தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இவரது பேச்சைக் கேட்டு கூட்டுறவு வங்கியில் நகையை அடகு வைத்த நிறைய பேரின் நகைகள் மூழ்கும் நிலைக்கு வந்துள்ளது.

இப்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு தான் நகைக்கடன் தள்ளுபடி செய்வோம் என்று திமுக கூறுவது புதுவித வேடிக்கையாகும். இதையெல்லாம் மையமாக வைத்து சட்டமன்றத்தில் கேள்விகளை எழுப்புகிறோம். பொதுவெளியில் கேள்விகளை எழுப்புகிறோம். ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக அதிமுக தான் செயல்படுகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,"பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது கட்சியின் நிலைப்பாட்டில் ஆளுங்கட்சியை எதிர்த்து பல்வேறு கருத்துகளை முன்வைக்கிறார். அதனால், பாஜக தான் எதிர்கட்சி போல செயல்படுகிறது என்ற கருத்தை ஊடகங்கள் தான் முன்வைக்கின்றன. ஆளுங்கட்சியை எதிர்த்து பாமக தலைவர் ராமதாஸ் கேள்வி கேட்கவில்லையா? எதிர்கட்சியாக உள்ள ஒவ்வொரு கட்சியும் அவரவர் கட்சி நலன் சார்ந்தும், மக்கள் நலன் சார்ந்தும் கேள்விகளை எழுப்புவது நியாயமான ஒன்று தான். அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in