ஈரோடு இடைத்தேர்தலில் எதிர் அணி இதுவரை சந்திக்காத தோல்வியைச் சந்திக்கும்: இளங்கோவன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தலில் வாக்களித்த ஈவிகேஎஸ்.இளங்கோவன்
ஈரோடு இடைத்தேர்தலில் வாக்களித்த ஈவிகேஎஸ்.இளங்கோவன்ஈரோடு இடைத்தேர்தலில் எதிர் அணி இதுவரை சந்திக்காத தோல்வியைச் சந்திக்கும்: இளங்கோவன் பேட்டி

எதிரணியில் இருப்பவர்கள் இதுவரை சந்திக்காத தோல்வியைச் சந்திப்பார்கள் என்று ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறினார்.

ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் இன்று காலை வாக்களித்தார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கை சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினின் கரங்களைப் பலப்படுத்தவும், அவரது 20 மாத நல்ல ஆட்சியின் அடையாளமாக இந்த வெற்றி கண்டிப்பாக அமையும். அதேபோல் ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு கண்டிப்பாக இருக்கும்.

வரும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் முடிவு அமையும். எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. என்றைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதோ, அன்றைக்கே மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என என் பெயர் அறிவிப்பதற்கு முன்பே மக்கள் முடிவு செய்துவிட்டனர். எனவே, மிகப்பெரிய வெற்றியாக இது அமையும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில்," வாக்கு வித்தியாசத்தை என்னால் சொல்ல முடியாது. இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியாக அமையும். எதிரணியில் இருப்பவர்கள் இதுவரை சந்திக்காத தோல்வியைச் சந்திப்பார்கள். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பேதம் இல்லாமல், சில தேர்தல் அலுவலகங்களை மூடினார்கள். அனுமதி பெறாமல் நடைபெற்ற தேர்தல் அலுவலகங்களை மூடிவிட்டனர். எனவே, தேர்தல் நல்லபடியாக, நேர்மையாக நடக்கிறது.எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை, இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால், விமர்சனங்களை அள்ளி வீசுகிறார்கள். ஆளுங்கட்சியின் மீது, அவர்கள் தேவையில்லாத பொய்யான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து இருக்கிறார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in