சுயசரிதை; மார்க்சிஸ்ட்களை மிரட்டும் ஸ்வப்னா சுரேஷ்!

பின்னால் இருந்து இயக்குவது பாஜகவா?
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரளத்தில் தங்கக் கடத்தல் வழக்கு மீண்டும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. கடத்தல் வழக்கின் முதன்மைக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷே அதற்குக் காரணமாகி உள்ளது தான் ஹைலைட்!

ஸ்வப்னா தனது சுயசரிதையை மலையாளத்தில் ’சதியுடெ பத்மவியூகம்’ என்னும் பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட, கேரளத்தின் பேசுபொருள் ஆகியுள்ளது இப்புத்தகம். போகிற, போக்கில் இடதுசாரி அரசின் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசுகிறது ஸ்வப்னாவின் சரிதை.

தங்கக் கடத்தல் வழக்கின் பின்னணி

கேரளத்தை சேர்ந்த பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிசெய்கிறார்கள். இவர்களின் வசதிக்காக திருவனந்தபுரத்தில் அரபு அமீரகத்தின் துணை தூதரகம் இயங்கி வருகிறது.  கடந்த 2020 -ம் ஆண்டு இந்த அலுவலகத்துக்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு புகார்வந்தது. இந்நிலையில், போலி அடையாள அட்டையுடன் அமீரகத்திற்கு அந்தப் பார்சலைப் பெறவந்தார்  தூதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸரித்குமார். சுங்கப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில்  வெளிவந்த மந்திரப்  பெயர்தான் ‘ஸ்வப்னா சுரேஷ்’.

இதனைத் தொடர்ந்து, பார்சலை விடுவிக்க பெரும்  அழுத்தம் கொடுத்து சிரத்தை எடுத்த ஸ்வப்னா, மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் உள்ளிட்ட பலரும் வரிசையாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 98 நாள்கள் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு இப்போது  மீண்டும் அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. 

யார் இந்த ஸ்வப்னா?

முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தில் பணிசெய்தவர் ஸ்வப்னா. ஒருகட்டத்தில், அங்கிருந்து வெளியேறிய இவர், கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் கே.எஸ்.ஐ.டி.ஐ.எல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். தங்கக்கடத்தல் வழக்கு வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து அவர்  பணிநீக்கம் செய்யப்பட்டார். இவரைப் பணிக்கு அமர்த்திய மாநில தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சிவசங்கரும் இதனால் சர்ச்சையில் சிக்கினார். 

சிவசங்கர், முதல்வர் பினராயி விஜயனின் செயலாளராகவும் இருந்ததால் இந்தக் கடத்தல் வழக்கு அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது. இதற்கு முன்பு ஏர் இந்தியா  நிறுவனத்தில் வேலைசெய்தார் ஸ்வப்னா. அப்போது, பாலியல் ரீதியாக தன்னை சீண்டியதாக அந்நிறுவன மேலாளர் மீது  மோசடியாக புகார் கொடுத்ததாகவும்  அவர்மீது வழக்கு இருக்கிறது.  தங்கக்கடத்தல் வழக்கில் கைதாகி இருந்த ஸ்வப்னா, கடந்த ஆண்டு நவம்பர் 5 -ம் தேதி ஜாமீனில் வந்தார். இப்போது தன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ’சதியுடெ பத்மவியூகம்’ என்னும் பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். இதன் பெரும்பகுதி கேரள அரசியலை உலுக்கிவருகிறது. 

ஸ்வப்னாவுக்கு பிறந்தநாள் கேக் ஊட்டும் சிவசங்கர் ஐ.ஏ.எஸ்
ஸ்வப்னாவுக்கு பிறந்தநாள் கேக் ஊட்டும் சிவசங்கர் ஐ.ஏ.எஸ்

பதிலுக்குப் பதில்!

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் இதற்கு முன்பாக, ’அஸ்வத்தாமாவு வெறும் ஒரு ஆனை’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார். அதில் தன் தரப்பு நியாயத்தையும், ஸ்வப்னா தனக்கு எதிராக சதிசெய்துவிட்டார் என்றும் எழுதியிருந்தார். 176 பக்கங்கள் கொண்ட அந்த நூலுக்குப் பதிலடியாகவே ஸ்வப்னா சுரேஷ் இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஸ்வப்னா தனது சரிதையில், சிவசங்கர் தனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி ஸ்வப்னாவுக்கு ஊட்டிவிடும் புகைப்படம், அவரோடு சேர்ந்து மது அருந்தும் புகைப்படம் உள்ளிட்ட வில்லங்கங்களையும் சேர்த்துள்ளார்.

வரிசை கட்டும் சர்ச்சைகள்

ஸ்வப்னா தனது புத்தகத்தில், ‘முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோயிலில் வைத்து எனக்குத் தாலிகட்டினார். என் நெற்றியில் குங்குமத்திலகமிட்டு உன்னைக் கைவிடமாட்டேன் என சொன்னார். தேசிய புலனாய்வு முகமை விசாரணையின் போதும் என் கழுத்தில் சிவசங்கர் கட்டிய தாலி இருந்தது.

கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால்  தங்கக்கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசோடு தொடர்புடையவர்களுக்கோ தொடர்பு இல்லை என சிறையில் இருந்து ஆடியோ வெளியிட்டேன். மீண்டும்  மார்க்சிஸ்ட் ஆட்சி வந்தால் மட்டுமே வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என அப்போது என்னை நம்பவைத்தார்கள். அதனால்தான் அப்படி ஆடியோ வெளியிட்டேன். என்னை வற்புறுத்தித்தான் அப்படி ஆடியோ வாங்கினார்கள்’ என்று அதிரடி கிளப்பி இருக்கிறார். 

சிவசங்கருடன் சேர்ந்து மது அருந்தும் ஸ்வப்னா...
சிவசங்கருடன் சேர்ந்து மது அருந்தும் ஸ்வப்னா...

அத்துடன், முதல்வர் பினராயி விஜயனின் குடும்பத்தினர் தொடங்கி முன்னாள் அமைச்சர் ஜலீல் வரை அமீரக தூதரகத்துடன் சரக்குப் பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டுள்ளார். கேரள முன்னாள் அமைச்சர் ஒருவர் தன்னை தவறான நோக்கத்துடன் பலமுறை விடுதிக்கு அழைத்ததாகவும், ஆனால் தான் உடன்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வாட்ஸ் - அப் தகவல்கள் மற்றும் உரையாடல் ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஸ்வப்னா. இதில், முதல்வர் பினராயி விஜயனின் மகள்  வீணாவைப் பற்றியும் எழுதியுள்ளார் ஸ்வப்னா.  

பாஜகவின் வேலையா?

இதுகுறித்துப் பேசும் கேரள மார்க்சிஸ்ட் கட்சியினர், “ஸ்வப்னா சுரேஷ் பாஜகவின் கைப்பாவையாக இருக்கிறார். அவர்கள்தான் அவரை இயக்குகிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் எல்லாம் ஸ்வப்னா விவகாரம் வேண்டுமென்றே கிளப்பிவிடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஸ்வப்னா விவாகரத்தை கிளப்பினார்கள். ஆனால், அது மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை. இப்போது மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் ஸ்வப்னா சுரேஷை பாஜகவே கிளப்பிவிட்டிருக்கிறது. அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் ஸ்வப்னா, இப்படியெல்லாம் அவதூறு பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியத்தை யோசித்துப் பார்த்தாலே இதற்குத் தீர்வுகிடைத்துவிடும்.

இந்த வழக்கில் முதல்வர் அலுவலகம் வரை விசாரணை நீண்டது உண்மைதான். ஆனால், முதல்வரிடம் விசாரணை நடக்கவில்லை. இந்த நுட்பத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். சிவசங்கர் ஐஏஎஸ் முதல்வர் அலுவலகத்தில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். ஸ்வப்னாவை வைத்து பாஜக ஆடும் அரசியல் ஆட்டம் கேரளத்தில் எடுபடாது. தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்பட யாரையும் மத்திய அரசு தன்னிச்சையாக இயங்கவிடவில்லை” என்கிறார்கள்.

ஆனால், தங்கக் கடத்தல் வழக்கை பினராயி விஜயன் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே விவரிக்கிறார்கள் மலையாள ஊடகவியலாளர்கள். இதற்கும் காரணம் இருக்கிறது. ஸ்வப்னா சுரேஷ், குற்றச்சாட்டில் இப்போது சிவசங்கரையும், அமைச்சர்களையும் இழுத்துள்ளார். அதுவே, முதல்வர் அலுவலகம் வரை நீள்கிறது. அவரை இயக்குபவர்கள் சொன்னால் பினராயி பெயரையும் இழுத்துவிடத் தயங்கமாட்டார் ஸ்வப்னா.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்வப்னா சுரேஷிடம் பேசினோம். “அனைத்தையும் புத்தகத்தில் தெளிவாக எழுதிவிட்டேன். நான் யாருக்குப் பின்னாலும் இல்லை. பாஜகவுக்கு என்னை இயக்க வேண்டிய அவசியமும் இல்லை. உண்மையிலேயே கம்யூனிஸ்ட் ஆட்சி மீண்டும்வர வேண்டும் என என்னிடம் போலியாக ஆடியோ கேட்கப்பட்டது. அதனால் தான் அப்படிக் குரல் கொடுத்தேன். நான் இவ்விஷயத்தில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன். விரைவில் இன்னும் அதிகத் தகவல்களை வெளியிடுவேன்” என்றார்.

கேரளத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கு காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சரிதா நாயர் கேரள காங்கிரஸுக்கு  பெரும் தலைவலியாக இருந்தார். அதேபோல் இப்போது மார்க்சிஸ்ட் தோழர்களுக்கு தலைவலியாக மாறி இருக்கிறார் ஸ்வப்னா. தலைவலியை எப்படி தீர்க்கிறார்கள் என்று பார்க்கலாம்! 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in