எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த இரண்டாவது தர்மயுத்தம்... ஓ.பன்னீர்செல்வம் சபதம்!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை வீழ்த்த இரண்டாவது தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுகவில்  முன்னாள் முதல்வர்கள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்  இடையே உட்கட்சி மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுக்குழு கூடி,  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் அதிமுக கட்சியின் கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்துவதற்கும் ஓபிஎஸ் தரப்புக்கு தடை விதித்தது.

இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக தீர்ப்பு வந்தது. இதனைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் அதிமுக உரிமை மீட்புக்குழு என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.  மாவட்ட வாரியாகச் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

மேலும் க்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர்,  எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காக இரண்டாவது தர்மயுத்தம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் இன்று  நடைபெற்ற அவரது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம் இதைத் தெரிவித்தார். "எடப்பாடி பழனிசாமி ஒரு துரோகி. அவர் பாஜகவிற்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துள்ளார். அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு வர இருக்கின்ற தேர்தலில் தகுந்த படிப்பினையைக் கொடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை வீழ்த்த  இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளேன்.

புரட்சித்தலைவரின் விதியை மீறி அதிமுக கட்சிக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் உண்மையான விசுவாசிகள் ஆகிய நாம்,  எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை வீழ்த்துவோம். இந்தத் தேர்தலில் ஒன்றிணைந்து செயல்பட்டால் 39 தொகுதிகளிலும் நமக்கு வெற்றி கிடைக்கும்" என்று  பேசியுள்ளார்.

பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுநாள் வரை சம்மதிக்காத நிலையில்,  பாஜகவை விட அதிக கோபத்தை அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in