
பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, கேரளாவின் முன்னேற்றத்திற்காக உழைத்த ஒரு பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை நாம் இழந்துவிட்டோம் என்று உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 79. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 4.25 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.
கடந்த 2004-ம் ஆண்டு ஏ.கே.ஆண்டனி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கேரள முதல்வராக உம்மன் சாண்டி பதவியேற்றார். கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும் , 2011-ல் மீண்டும் முதல்வராகவும் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமுறை கேரள முதல்வராக இருந்த உம்மன்சாண்டி, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பள்ளி தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, கேரளாவின் முன்னேற்றத்திற்காக உழைத்த ஒரு பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை நாம் இழந்துவிட்டோம்.
குறிப்பாக நாங்கள் இருவரும், மாநில முதலமைச்சர்களாக இருந்தபோதும், பின்னர் நான் டெல்லிக்கு சென்றபோதும் அவருடன் நான் நடத்திய பல்வேறு தொடர்புகளை நினைவு கூர்ந்தேன். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், ஆதரவாளர்களுடனும் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.