பிரதமர் மோடியை ராகுலால் மட்டுமே எதிர்கொள்ள முடியும்: அசோக் கெலாட் திட்டவட்டம்

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

பிரதமர் மோடியை ராகுல் காந்தியால் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜுன கார்கே முறைப்படி இன்று பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், “காந்தி அல்லாத ஒருவர் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்பது ராகுல் காந்தியின் ஆசை. எனினும், கடைசி நிமிடம் வரை அவரை தலைவராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடிக்கும் அவரது அரசாங்கத்துக்கும் சவால் விடும் வகையில் ராகுலால் மட்டுமே செயல்படமுடியும்'' என்றார்.

மல்லிகார்ஜுன கார்கேவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த கெலாட், "இன்று ஒரு புதிய தொடக்கம். நாங்கள் மல்லிகார்ஜுன கார்கே ஜியை வாழ்த்துகிறோம், அவருடன் இணைந்து மேலும் கட்சியை வலுப்படுத்த பாடுபடுவோம்" என்று கூறினார்.

மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) தலைவராக பொறுப்பேற்கிறார். இந்த விழாவில் கார்கேவுக்கு சோனியா காந்தி தேர்தல் சான்றிதழை வழங்குவார். பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து ஓய்வில் இருக்கும் ராகுல் காந்தியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு-காந்தி குடும்பத்தைச் சேராத முதல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவார். கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூரைப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் கார்கே வீழ்த்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in