`ஈபிஎஸ் செயலால் கோடீஸ்வரர்கள் தான் அந்த பதவிக்கு வர முடியும்'- ஆதரவாளர்களிடம் பொங்கிய ஓபிஎஸ்

`ஈபிஎஸ் செயலால் கோடீஸ்வரர்கள் தான் அந்த பதவிக்கு வர முடியும்'- ஆதரவாளர்களிடம் பொங்கிய ஓபிஎஸ்

அதிமுக கழக சட்ட விதிகளின்படி கழகம் செயல்பட வேண்டும் என்பதற்காக தர்மயுத்தத்தை தொடங்கியுள்ளோம் என்றும் அதிமுக சட்ட விதிகளின்படி கழகம் செயல்பட வேண்டும் என்றும் ஓபிஎஸ் கூறினார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக அறிவித்து கொண்டார். அவருக்கு அனைத்து மாவட்டச் செயலாளர்களும் இருப்பதாக கூறி வருகின்றார். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கை கண்டித்து ஓபிஎஸ் பக்கம் அதிமுகவினர் இணைந்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதனிடையே, தேனி மாவட்டம், பெரியகுளம் அருகிலுள்ள கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை நேற்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின்னர், கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ஓபிஎஸ், "கட்சியின் சட்ட விதிகளை தன்னுடைய சுயலாபத்திற்காக திருத்தக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் பல பிரச்சினைகள் உருவாகி இருக்கிறது. இன்றைக்கு நாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிபடி தான் நடக்க வேண்டும் என தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். புதிதாக சில விதிகளை பழனிசாமி தரப்பினர் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், சாதாரண தொண்டன் கூட உச்சப் பதவிக்கு வரை வர முடியும் என்று சட்ட விதியை உருவாக்கி இருக்கிறார். அதனால் தான் ஓபிஎஸ் முதலமைச்சராகவும், பழனிசாமி முதலமைச்சராகவும், ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் வரக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தது.

ஆனால் இன்றைய நிலையில் கட்சியின் தலைமை பொறுப்புக்கு போட்டியிடுவதற்கு 10 மாவட்ட செயலாளர்கள் முன்னொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், அவர்கள் 5 ஆண்டு காலம் கட்சி பதவியில் இருக்க வேண்டும் என்று சொன்னால் மிட்டாதார், மிராசுதார், கோடீஸ்வரர்கள் தான் அந்த பதவிக்கு வர முடியும் என்ற நிலை உருவாகும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in