நாம் அடித்துக் கொண்டிருந்தால் தான் ஆளுங்கட்சி, எதிர்கட்சியாக இருக்கு முடியும்: பேரவையில் பேசிய கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி நாம் அடித்துக் கொண்டிருந்தால் தான் ஆளுங்கட்சி, எதிர்கட்சியாக இருக்கு முடியும்: பேரவையில் பேசிய கேபி. முனுசாமி

அதிமுகவும், திமுகவும் அடித்துக் கொண்டிருந்தால் தான் நமக்குள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியாக இருக்க முடியும் என சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி சூசகமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 56 சதவீத வாக்குறுதிகளில் விவசாயிகளுக்காக இடம் பெற்றிருந்ததாகவும், ஆனால் நிதிநிலை அறிக்கையில் அங்கொன்றும், இங்கொன்றுமாக உள்ளது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ஆயிரம் ரூபாயும் எப்போது வழங்கப்படும் என அவர் கேள்வி எழுப்பினார். 

அதற்குப் பதிலளித்து பேசிய வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்," பொறுத்தார் பூமியாழ்வார் என்பதற்கேற்ப நெல்லுக்கும், கரும்புக்கும் சொன்ன விலை உயர்த்தி வழங்கப்படும். அந்த நம்பிக்கை விவசாயிகளுக்கு உள்ளது " என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கே.பி. முனுசாமி, " அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு என சொன்னால் வாக்களித்த பெண்கள் திமுக அரசை நம்புவார்களா? நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியதை எப்போது செயல்படுத்துவீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ’’நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இருந்த காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் 150 நாட்களாக உயர்த்தப்பட்டிருக்கும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாள் வேலை திட்டத்திற்கு 281 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசின் நிதியை பொருட்படுத்தாமல் 40 கோடி மனிதத் திறன் நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

இதனிடையே விவாதத்தை முடிக்க சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில் ஆவேசமடைந்த கே.பி.முனுசாமி," உணர்ச்சி பூர்வமாக பேசிக் கொண்டிருக்கிறேன். அதிமுகவும் திமுகவும் அடித்துக் கொண்டிருந்தால் தான் நமக்குள் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சியாக இருக்க முடியும்" என சூசகமாக பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in