`2,169 ஓபிசி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீடு இடங்களில் நிரப்பப்பட்டது 6 மட்டுமே'- மதுரை எம்பி அதிர்ச்சி தகவல்

`2,169 ஓபிசி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீடு இடங்களில் நிரப்பப்பட்டது 6 மட்டுமே'- மதுரை எம்பி அதிர்ச்சி தகவல்

2,169 ஓபிசி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீடு இடங்களில் வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒன்றிய அரசால் நிரப்பப்பட்டுள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான (AIQ) ஓபிசி இட ஒதுக்கீடு விதிமீறல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொது போட்டியில் (Open Compettion) இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே. அதாவது பொதுப் போட்டியில் அனுமதி பெறுகிற ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் இட ஒதுக்கீடு எண்ணிக்கையில் கழிக்கப்பட மாட்டார்கள். இது இட ஒதுக்கீட்டு கோட்பாட்டின் அடிச்சுவடி. உச்சநீதிமன்ற தீர்ப்புகள், அரசின் வழி காட்டல்கள் பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட வழிமுறை.

ஆனால் மருத்துவ இளநிலை பட்டப்படிப்பு அகில இந்திய இடங்களுக்கான அனுமதியில் இந்த கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது என தெரிகிறது. ஓபிசி மருத்துவ இளங்கலை இட ஒதுக்கீட்டு இடங்கள் 2,169. நிரப்பப்பட்ட ஓபிசி இடங்களோ 6 மட்டுமே. போட்டியில் தேர்வான 2,163 ஓபிசி மாணவர் எண்ணிக்கை இட ஒதுக்கீடு அனுமதியாக கணக்கு வைக்கப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒன்றிய அரசுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த மருத்துவ இளங்கலைப்பட்ட காலியிடங்கள் எவ்வளவு?

ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட வேண்டிய இடங்களில் எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன? பொதுப் போட்டியில் தேர்வான ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன? ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு வாயிலாக அனுமதிக்கப்பட்டு இருப்பவர்கள் (பொதுப் போட்டியில் இடம் பெற்ற இப்பிரிவினர் நீங்கலாக) பிரிவு வாரி எவ்வளவு? பொதுப் போட்டியின் வாயிலாக அனுமதி பெற்ற ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள், ஓபிசி, எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீட்டு எண்ணிக்கை கணக்கிலும் சேர்க்கப்பட்டு உள்ளனரா?. ஆம் எனில் எத்தனை? முழு விவரங்களை வெளியிடுமாறு கோரி உள்ளேன்.

இட ஒதுக்கீடு மீறல் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட ஓபிசி மாணவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி மாணவர் அனுமதியிலும் இக் கோட்பாடு மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவக் கல்லூரி அனுமதிகளில் ஓபிசி இட ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசால் மறுக்கப்பட்டு போராடி, நீதிமன்றங்களில் வாதாடி பெறப்பட்ட ஒன்று. அதில் தமிழகம் முன்னின்றது. ஆனால் இன்றும் அதை சிதைக்கிற முயற்சிகள் தொடர்கின்றன. இதை அனுமதிக்க இயலாது' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in