தடைகளைத் தகர்த்து தாண்டவமாடும் ஆன்லைன் சூதாட்டம்!

மத்திய - மாநில அரசுகள் செய்யவேண்டியது என்ன?
தடைகளைத் தகர்த்து தாண்டவமாடும் ஆன்லைன் சூதாட்டம்!

ஆன்லைன் சூதாட்டத்துக்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சட்டசபையில் அறிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை தொடர்ந்து நடத்தி, சூதாட்டத்துக்குத் தடை பெறுவதா, புதிய சட்டம் நிறைவேற்றுவதா என்று அவர் தெளிவுபடுத்தவில்லை என்றாலும் இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது.

முதல்வரின் அறிவிப்புக்குப் பின்னணியில் இருப்பது, ஒரு கோடி ரூபாயை இழந்ததால் சென்னை பெருங்குடியில் வங்கி அதிகாரி மணிகண்டன், மனைவி, 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று பாமக மருத்துவர் ராமதாஸ், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திக தலைவர் கி.வீரமணி போன்றோர் அறிக்கை வெளியிட, இப்பிரச்சினையை அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் எழுப்பினார்.

எப்படி நடக்கிறது மோசடி?

"ரம்மி விளையாடுங்க... நிறைய சம்பாதிங்க" என்று இணையத்தில் கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடிகளாக விளம்பரங்கள் தோன்றுகின்றன. போதாக்குறைக்கு, டிவியில் நம் மனம் கவர்ந்த நடிகர், நடிகைகளும், விளையாட்டு வீரர்களும் தோன்றி, "நான் இவ்வளவு வென்றேன்; நீங்களும் விளையாடுங்க" என்று ஆசையைத் தூண்டுகிறார்கள்.

இதிலும் கவிழாத நெஞ்சுறுதிக்காரர்களுக்காகவே அடுத்த ஐட்டத்தை வைத்திருக்கின்றன, ஆன்லைன் கேம்ப்ளிங் நிறுவனங்கள். அது புதுமுகங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட இலவச அனுமதி. பணம் செலுத்தாமல் விளையாடி, பணம் ஜெயிக்கிற வாய்ப்பு. இப்படி விளையாடப் போகிறவர்கள் 100, 200, 500 என்று மளமளவென சம்பாதிக்க, அப்புறம் கைக்காசைப் போட்டு ஆடும் மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். இப்படி இந்தியா முழுக்க கடந்த ஓராண்டில் மட்டும் 8 கோடி பேர் விளையாடியிருப்பதாகச் சொல்கிறது, ஆன்லைன் கேம்ப்ளிங் நிறுவனங்களின் கூட்டமைப்பு.

"ஒருத்தன ஏமாத்தணும்னா அவனோட ஆசையைத் தூண்டணும்" என்ற அதே பழைய ஃபார்முலாதான். முதல் இரண்டு மூன்று ஆட்டங்களில் நம்மை ஜெயிக்கவைத்து, ஆசையைக் காட்டிவிட்டு பிறகு எல்லாவற்றையும் பறிப்பது. பணத்தோடு போனால்கூட விட்டுவிடலாம். விளையாடுபவர்களின் உயிரையும், விளையாட்டோடு தொடர்பே இல்லாத தாய், மனைவி, குழந்தைகள் போன்ற அப்பாவிகளின் உயிரையும் பறிப்பதால்தான் தடை கேட்கும் நிலை வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 பேர், ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பணத்தைப் பறிகொடுத்துவிட்டுக் கடன்காரனாக, நடைபிணமாக வாழ்வோரின் எண்ணிக்கையையும் சேர்த்தால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கலாம் என்கிறார்கள்.

தடை போட முடியாதா?

பொது இடங்களில் ரம்மி போன்ற சூதாட்டங்களை ஆடினால் வழக்குப் போடும் போலீஸ், ஆன்லைனில் விளையாடுபவர்களை மட்டும் எப்படி அனுமதிக்கிறார்கள்? இது யாரோ சாமானியர் கேட்ட கேள்வியல்ல. நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவரே போலீஸைப் பார்த்துக் கேட்ட கேள்வி.

நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ஊருக்கு வெளியே தனியார் தோட்டத்தில் சீட்டு விளையாடியதற்காக, தன்மீது போட்ட வழக்கை ரத்துசெய்யக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, கேட்ட கேள்வி தான் இது. கூடவே, “தெலங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க 2017-லேயே சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அதேபோல மத்திய - மாநில அரசுகளும் தடை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தவும் செய்தார் நீதிபதி.

அப்போதும் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியதால், கடந்த 21.11.2020-ல் ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது அன்றைய அதிமுக அரசு. இந்தத் தடையை மீறி ஆன்லைனில் சூதாடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கவும், அரங்கு வைத்து இந்த ஆன்லைன் விளையாட்டை நடத்துவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 வருட சிறைதண்டனை விதிக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தை அணுகி எட்டே மாதத்தில் இந்தச் சட்டத்தை ரத்துசெய்ய வைத்தன ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள். இதனால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தையும், நிம்மதியையும், உயிரையும் இழப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கே.நீலமேகம்
கே.நீலமேகம்

என்ன செய்யலாம்?

ஆன்லைன் சூதாட்டங்களைத் தமிழக அரசு தடை செய்யும்முன்பே, அதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி. அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.நீலமேகம், இந்தப் பிரச்சினையை உன்னிப்பாக கவனித்துவருபவர். (டிக்டாக்குக்கு எதிராக 2019-ல் இவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே, அந்தச் செயலிக்கு மத்திய அரசு தடைவிதித்தது.) அவரிடம் இதுகுறித்துப் பேசினோம்.

"வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஆன்லைன் ரம்மி என்பது ஒரு கேம் என்று மட்டும்தான் தெரிகிறது. ஆனால், அதற்குள்ளே சைபர் க்ரைம், தகவல் திருட்டு, வரி ஏய்ப்பு, அரசின் கண்காணிப்பு இல்லாமை என்று எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி சம்பாதிக்கும் இந்த நிறுவனங்களில் பல இந்தியாவுக்குள் அலுவலகம்கூட வைத்துக்கொள்வதில்லை. ஒரு பைசாகூட இந்தியாவுக்கு வரியாக செலுத்துவதில்லை. ஏற்கெனவே இருக்கிற தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழேயே இந்தக் குற்றங்களின் மீது மத்திய - மாநில அரசுகளும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு தனிநபரின் செல்போனை ஆய்வுசெய்வது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதால்தான் தடைச்சட்டம் கேட்டோம்.

நீண்ட வலியுறுத்தலுக்குப் பிறகு தமிழக அரசு தடைச்சட்டம் கொண்டுவந்தது. ஆனால், அவசர கதியில் கொண்டுவந்ததாலும், சட்டம் கொண்டுவந்ததற்கான போதுமான காரணங்களைக் கூறவில்லை என்பதாலும்தான் நீதிமன்றம் சட்டத்தை ரத்துசெய்துவிட்டது. அதேநேரத்தில் உரிய விதிகளைப் பின்பற்றி புதிய சட்டம்கொண்டுவர அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

2019-ம் ஆண்டு கணக்குப்படி தினமும் ஒரு நாளைக்கு லட்சம் பேர் புதிதாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிறார்கள். கரோனோ காலத்தில் இந்த நிறுவனங்களின் லாபம் 200 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆன்லைன் கிளாஸ் என்ற பெயரில் டீன்ஏஜ் பையன்கள் எல்லாம் இதில் விளையாடி, அப்பாவின் ஏடிஎம் கார்டு எண்ணைக் கொடுத்துப் பணத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள்.

உலகிலேயே இந்தியாவில்தான் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களை அடிமையாக்குவதையும், குற்றவாளியாக்குவதையும் அந்நிய நிறுவனங்கள் செய்கின்றன என்றால், இதை டிஜிட்டல் வாராகத்தான் பார்க்க வேண்டும். அமெரிக்காவில் இணைய குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக 1998-லேயே ‘கோபா’ (Child Online Protection Act – COPA) என்ற தனிச்சட்டத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள். இந்தியாவில் அப்படியான சட்டங்களும் இல்லை. ரொம்ப சீரியஸான பிரச்சினை இது. நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது, புற்றீசல்போல பல்லாயிரக்கணக்கான ஆன்லைன் மோசடி நிறுவனங்களும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. காலம் தாழ்த்தாமல் மத்திய - மாநில தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும்" என்றார் அவர்.

சி.ராமசுப்பிரமணியன்
சி.ராமசுப்பிரமணியன்

மனநல மருத்துவர் பேராசிரியர் சி.ராமசுப்பிரமணியனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "ஆன்லைன் சூதாட்டம் வெறும் போதை மட்டுமல்ல, இதுவும் ஒரு நோய்தான் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. உளவியல் நிபுணர்களின் ஆலோசனையும், சிகிச்சையும் கண்டிப்பாகத் தேவை. எப்படி கரோனா, எய்ட்ஸ் பற்றி எல்லாம் அரசும், மீடியாக்களும் சேர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினவோ, அதேபோல ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது ரொம்ப ரொம்ப அவசரம். இது ஒரு சமூகக்கடமை.

மதுரையிலேயே தினம்தினம் எத்தனையோ பேர் இந்தப் பிரச்சினையால் பணத்தை, மன நிம்மதியை, உடல்நலத்தை இழப்பதைப் பார்க்கிறேன். தொற்று நோய்கூட ஒரு தனிமனிதனையும், அவன் சார்ந்தோரை மட்டும்தான் பாதிக்கும். ஆனால், இது ஒட்டுமொத்த சமூகத்தையும், நாட்டையுமே பாதிக்கிறது. அரசு சட்டமியற்றி இரும்புக்கரம் கொண்டு இதை அடக்காவிட்டால், நாட்டின் எதிர்காலமே பாழாகிவிடும். உழைக்காமல் பணம் கிடைக்க வேண்டும், திடீர் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற எண்ணம் இல்லாத ஆட்களே இல்லை என்கிற அளவுக்கு இன்று சமூதாயம் சீரழிந்திருக்கிறது. இதுவும் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்குவதற்கு ஒரு காரணமாகிவிட்டது. எனவே, அந்த எண்ணத்தை மாற்றுவதற்கான முயற்சிகளை பள்ளிப் பருவத்தில் இருந்தே முயற்சிக்க வேண்டும்" என்றார்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராகப் போராடிவரும் மற்றொரு வழக்கறிஞரான முத்துக்குமார் கூறும்போது, "முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை. விசாரணைக்கு வந்தாலும்கூட, அதில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே, நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்காமல், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து திருத்தப்பட்ட சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசர அவசியம்" என்றார்.

முத்துக்குமார்
முத்துக்குமார்

சாமானியர்கள், கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை லாட்டரி வாங்கியே அழிக்கிறார்கள் என்று லாட்டரி விற்பனையையே தடை செய்த முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. எவ்வளவு தடைகள், இடையூறுகள் வந்தாலும் ஆன்லைன் சூதாட்டத்தையும் தடை செய்து நாட்டுக்கே வழிகாட்டும் பொறுப்பு நம் தாய்த்தமிழ் நாட்டுக்கு உண்டு.

சொன்னதைச் செய்யுமா ஸ்டாலின் அரசு?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in