ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது!

சட்டப்பேரவையில் முதலமைச்சர்..
சட்டப்பேரவையில் முதலமைச்சர்..ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது..!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் தாக்கல் செய்த ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அவசர சட்டம் இயற்றுவதற்கு தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு செப். 26-ல் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில், அக். 19-ல் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின்  ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதாவில் சில விளக்கங்கள் கேட்டு, கடந்த நவ.24-ல் அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். அதற்கு 24 மணி நேரத்தில் சட்டத்துறை விளக்கம் அளித்தது. ஆனாலும் தமிழக அரசின் விளக்கங்களை ஏற்க மறுத்த தமிழக ஆளுநர் சட்டமசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பினார்.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டமசோதா மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வது என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் சூதாட்டத்தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

சட்டமசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். முன்னதாக சட்டமசோதா குறித்து பேரவையில் முதலமைச்சர் பேசியதாவது, ‘’ ஆன்லைன் சூதாட்டத்தால் 41 உயிர்களை இழந்துள்ளோம் என்ற வருத்தத்தோடு இந்த உரையைத் துவங்குகிறேன். அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தான் இந்த மசோதாவை நான் இங்கு தாக்கல் செய்துள்ளேன். இதயமுள்ளவர்கள் யாருக்கும் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. சட்ட ஒழுங்கை பேணுவதும், மக்களை பாதுகாப்பதும், மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை.

மாநில எல்லைக்குள்ள மக்கள் அனைவரையும் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு. ஆன்லைன் சூதாட்ட அநியாயம் தொடராமல் இருக்க, இந்த சட்ட முன்வடிவை அனைத்து உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும்” என பேசினார்.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டமசோதா குறித்து ஓபிஎஸ் பேச அனுமதி அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in