மு.க. ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி: சாதித்ததா, சறுக்கியதா?

மு.க. ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி: சாதித்ததா, சறுக்கியதா?

கரவோஷங்களுக்கு மத்தியில் தமிழக முதல்வராக 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று சொல்லி ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டை (மே 7) நிறைவு செய்துவிட்டது. “பத்து, இருபது ஆண்டுகளில் செய்யக்கூடிய சாதனைகளை இந்த ஓராண்டில் செய்து முடித்திருக்கிறோம்” என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், “ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி வேதனை” என்கின்றன எதிர்க்கட்சிகள். பாராட்டுப் பத்திரங்கள், எதிர்க்கட்சிகளின் விமர்சன கணைகளுக்கு அப்பால் ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சி சாதித்ததா, சறுக்கியதா?

கரோனா சவால்

பொதுவாக, புதிதாகப் பதவியேற்கும் அரசுக்குக் கிடைக்கும் ‘ஹனிமூன் காலம்’ என்ற அனுகூலம் திமுக அரசுக்குக் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் சுனாமி அலையைப் போல மிரட்டிக்கொண்டிருந்த கரோனா இரண்டாம் அலை, மறுபுறம் தள்ளாடிக்கொண்டிருந்த தமிழகத்தின் நிதிநிலை என இரட்டை நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றது. பதவியேற்றவுடனே போர்க்கால அடிப்படையில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் செயல்பட வேண்டியிருந்தது. நிரம்பி வழிந்த கரோனா நோயாளிகளால் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் வரிசைக்கட்டி நின்ற ஆம்புலன்ஸ்கள் என புதிய அரசுக்கு சவால்கள் காத்திருந்தன.

இந்த சவால்களை ஸ்டாலின் அரசு திறம்படவே கையாண்டது என்று சொல்லலாம். படுக்கை வசதிகளை அதிகரிக்க பல மாவட்டங்களில் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து, ஆக்சிஜன் உற்பத்திக்கு தொழில் துறை மூலம் முன்னுரிமை கொடுத்து துரிதமாகச் செயல்பட்டது ஸ்டாலின் அரசு. கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்வதில் மக்கள் சுணக்கம் காட்டிய வேளையில் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியது திமுக அரசு. கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டதில் முதல்வர், அமைச்சர், செயலாளர், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பிற முன்களப் பணியாளர்களின் ஒருங்கிணைப்பு மெச்சும் வண்ணம் இருந்தது.

வாக்குறுதிகள் நிறைவேற்றம்

2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தனது தேர்தல் அறிக்கையில் 502 வாக்குறுதிகளை அளித்திருந்தது. இதில், ஆட்சி பொறுப்பேற்றவுடனே கரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 4 ஆயிரம் ரூபாய், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், அது திருநங்கைகளுக்கும் விஸ்தரிப்பு, பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு போன்ற தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களில் கையெழுத்திட்டு ‘டேக் ஆஃப்’ ஆனார் ஸ்டாலின்.

தேர்தல் அறிக்கையில் சொல்லாத, தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கரோனா சிகிச்சைக்கான காப்பீட்டு செலவை அரசே ஏற்கும் திட்டம், முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை, கரோனாவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு வைப்புத்தொகை, 14 மளிகை பொருட்களின் தொகுப்பு போன்ற திட்டங்கள் மக்களின் பாராட்டைப் பெறத் தவறவில்லை. கோயில்களில் தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்ட அமல், ஆக்கிரமிப்பில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்பு என திமுக அரசின் அறிவிப்புகளும், திட்டங்களும் வரிசைகட்டின.

தமிழகத்தில் முதன் முறையாக வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது பாராட்டைப் பெற்றது. மகளிர் நலன் சார்ந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன்கள் ரூ. 2,756 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. தகுதியுள்ளவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தமிழ் மொழித் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, இன்னுயிர் காப்போம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என கடந்த ஓராண்டில் மட்டும் பல திட்டங்களை திமுக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியிருக்கிறது. உயர் கல்வி கற்கும் பெண்களுக்கு ரூ.1000 உதவி திட்டம் உள்பட பல முற்போக்குத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

தொல்லை தரும் நீட்

தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஏராளமான குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது இப்போதுதான். நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு தொடங்கி பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கண்காணிக்கும் குழு, பொருளாதார ஆலோசனைக் குழு, சமூக நீதி கண்காணிப்புக் குழு, கலைஞர் எழுதுகோள் விருதுக்கான குழு, நூலக சீரமைப்புக் குழு என தொடந்து பல குழுக்கள் ஓராண்டில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஓர் ஆட்சி சிறப்பாகவும் செம்மையாகவும் நடைபெற பல தரப்பட்ட அறிஞர் பெருமக்களின் ஆலோசனைகள் தேவை. அந்த வகையில் இதுபோன்ற குழுக்கள் அமைப்பு பாராட்டுக்குரிய அம்சமே. இக்குழுக்களில் திமுக ஆதரவாளர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், போகப் போக அது சரி செய்யப்படவும் வாய்ப்புகள் உண்டு.

கடந்த ஓராண்டில் திமுகவின் அறிவிப்புகள், திட்டங்கள் ஒவ்வொன்றையும் அதன் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் கொண்டாடித் தீர்த்தார்கள். அதேவேளையில், தேர்தல் அறிக்கையில் சொல்லியதை நிறைவேற்றாமல் திமுக தப்பிக்கப் பார்க்கிறது என்ற அவச்சொல்லுக்கும் சில அம்சங்கள் காரணமாயின. அதில், நீட் தேர்வு ரத்து விவகாரம் முன்னிலை பிடித்தது. நீண்ட சட்டப் போராட்டத்தின் மூலமே நீட் தேர்வை விலக்கவோ அல்லது ரத்து செய்யவோ முடியும் என்ற நிலையில், தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர் செய்த அதீதப் பிரசாரம் இந்த விஷயத்தில் விமர்சனம் ஏற்பட வழிவகுத்தது.

அடித்த பல்டி

தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு வாக்குறுதியைத் திமுக அளித்தது. ஆனால், “விலை குறைப்புக்கு இப்போது வாய்ப்பில்லை” என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்டி அடித்தது யாரும் எதிர்பாராதது. ஆனால், பிறகு பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு 3 ரூபாய் விலை குறைப்பு செய்தார்கள். அப்படியும் டீசலுக்கு விலை குறைப்பு இல்லை. எரிவாயு சிலிண்டருக்கு 100 மானியம் அளிக்கும் விஷயத்தில் மாநில அரசின் கையில் அதிகாரம் இல்லை என்று கைவிரித்ததும் விமர்சனத்துக்குள்ளானது. சொன்னபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவதிலும் தடுமாற்றம் தெரிகிறது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை என்ற தேர்தல் வாக்குறுதியையும் திமுக எப்போது, எப்படி நிறைவேற்றப் போகிறது என்று தெரியவில்லை. ‘திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டும் கூடவே வரும்’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் உண்மையாகி வருவது திமுக ஆட்சிக்கு எச்சரிக்கை மணி.

கரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பிலிருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. தமிழக அரசுக்கு 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை இருப்பது திமுக அரசுக்குப் பெரும் சவால்தான். பெண்களுக்கான உரிமைத் தொகை வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இந்தக் கடன் சுமை இடையூறாக இருக்கக்கூடும். அதையொட்டியே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆண்டு வெளியிட்ட வெள்ளை அறிக்கையும் இருந்தது. “திமுக அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதிலிருந்து பின்வாங்கமாட்டோம்” என்று ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். எனினும் திமுக ஆட்சி மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தொடர்கின்றன.

எவ்வளவு மதிப்பெண்?

திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை குறித்து மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாமிடம் பேசினோம். “திமுக ஆட்சியின் 6 - 7 மாத செயல்பாடுகளைத்தான் அலச முடியும். முதல் ஆறு மாதங்கள் கரோனா, மழை என்றே சென்றுவிட்டது. இலவச பேருந்து பயணம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடன் ரத்து, நகைக் கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி போன்றவை கிராமப்புறங்கள் சார்ந்த சிறப்பான திட்டங்கள்.

மக்களைத் தேடி மருத்துவம் நகர்ப்புறம் சார்ந்து ஒரு நல்ல திட்டம். அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டதில் மருத்துவத் துறை சிறப்பாக செயல்பட்டது. காவல் துறையில் மேல் மட்டத்தில் உள்ள ஒருங்கிணைப்பும் தரமான செயல்பாடுகளும் கீழ்மட்டம் வரை கொண்டு செல்லப்படவேண்டும். சமீபத்தில் நிகழ்ந்த லாக் அப் மரணங்கள் இதை உணர்த்துகின்றன.

‘தராசு’ ஷ்யாம்
‘தராசு’ ஷ்யாம்

நிறைய குழுக்கள் இந்த ஆட்சியில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு ப்ளஸ் பாயிண்ட். பலரோடு இணைந்து பயணிப்பதும் ஆலோசனைகளைக் கேட்பதும் ஓர் ஆரோக்கியமான ஜனநாயகம். நீட் தேர்வுக்கு செல்வோர் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனால், அதை தமிழகத்தின் சாப்பாட்டு பிரச்சினை போல மாற்றிவிட்டார்கள். அதில் அரசியல் புகுத்தப்பட்டதுதான் காரணம். இதற்கு திமுகவும் முக்கிய காரணம். நீட்டால் ஓட்டெல்லாம் வராது. ஆனால், அதை ஒரு கவுரவச் சின்னம் போல ஆக்கிவிட்டார்கள். ஆனால், பெண்களுக்கான ரூ.1000 என்பது ஓட்டாக மாறக்கூடியது. இதைப் படிப்படியாகத்தான் செயல்படுத்த முடியும். இந்த ஆட்சிக்கு இன்னும் நிறைய சவால்கள் இருக்கின்றன. ஓராண்டு திமுக ஆட்சிக்கு 60 முதல் 70 மதிப்பெண்களை தாராளமாக வழங்கலாம்” என்கிறார் ஷ்யாம்.

பி.கே. பாதையில் திமுக?

தேர்தலுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் போட்டுக்கொடுத்த பாதையில் திமுக பயணித்தது. பிரசாந்த் கிஷோர் பணி முடிந்து சென்றுவிட்டப் பிறகும் அந்தப் பாதையிலிருந்து விலகாமல் திமுக செல்வது அப்பட்டமாகத் தெரிகிறது. சமூக ஊடகங்களில் டிரெண்டிங் நிகழ்வுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற விமர்சனத்துக்கும் அது வழி வகுத்திருக்கிறது.

“அரசியல் என்பதே சமூக ஊடகங்களில் விருப்பக் குறியீடுகளைப் பெறுவதில்தான் இருக்கிறது. சமூக ஊடகங்களில் டிரெண்டிங் விஷயங்களுக்கு முதல்வரும் திமுகவும் முன்னுரிமை கொடுப்பது பிரசாந்த் கிஷோரின் மாயையில் இருந்து விடுபடவில்லை என்றுதான் தோன்றுகிறது. அதேவேளையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவைப் பார்த்து முதல்வர் அதற்கு செவி மடுப்பது நல்ல விஷயம்தான். அது ஒரு தலைவரின் கடமை. அதை திறம்பட ஸ்டாலின் செய்கிறார். ஆனால், அது மட்டுமே தலைமைத்துவம் கிடையாது. நிறைய விஷயங்களைத் தவிர்க்கலாம். அது நம்முடைட சக்தியை வீணடிக்கும். நாளை எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாது. முதல்வரும் சோர்வடைந்துவிடுவார்.” என்றும் சொல்கிறார் ஷ்யாம்.

1996-ல் துரிதமாக ஊழல் வழக்குகள் முடுக்கிவிடப்பட்டு 6 மாதங்களுக்குள் ஜெயலலிதாவே கைது செய்யப்பட்டார். ஆனால். கடந்த ஓராண்டில் மட்டும் முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கையில் வேகம் இல்லை. இந்த விஷயத்தில் திமுக அரசு மீது அக்கட்சித் தொண்டர்களே அதிருப்தியில்தான் இருக்கின்றனர்.

ஊழல் நடவடிக்கைகள் என்ன?

இதுதொடர்பாக அறப்போர் இயக்க அமைப்பாளர் ஜெயராமிடம் பேசினோம். ”ஓராண்டு ஆகியும்கூட ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்ட ஊழல்களில் அதிகாரிகள் ஒருவர் மீதும் வழக்குப்போடவில்லை. முழுமையான இ-டெண்டர் கொண்டு வருவோம் என்றார்கள். அதையும் கொண்டுவரவில்லை. ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் ஊழல் நடைபெறாமலும் இருக்க வேண்டும். இதற்கு வெளிப்படைத்தன்மை முக்கியம். அதுவும் இல்லை. சேவை பெறும் உரிமைச் சட்டத்தையும் கொண்டு வரவில்லை. லோக் ஆயுக்தாவை வலுப்படுத்துவோம் என்றார்கள். அதையும் செய்யவில்லை.

ஜெயராம்
ஜெயராம்

ஊழல்களை ஒழிக்கும் ஆக்கபூர்வமான எந்த செயல்பாடுகளும் ஓராண்டில் நடக்கவில்லை. மாறாக, திமுக ஆட்சியில் கரூரில் நெடுஞ்சாலைத் துறையில் போடப்படாத சாலைகளுக்கு பணம் எடுத்த ஊழல் வெளிவந்துவிட்டது. ரூ.35 லட்சம் லஞ்சப் பணத்துடன் போக்குவரத்து அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறை பிடிக்கிறது. ஆனால், அவரை கைது செய்யவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இதுபோன்ற ஊழல் நடைபெறாமல் இருக்க வேண்டுமென்றால் வெளிப்படைத்தன்மை கட்டாயம் தேவை” என்றார் அவர்.

ஓர் ஆட்சியின் ஓராண்டுக் காலம் என்பது, அந்த ஆட்சி அடுத்த நான்கு ஆண்டுகள் எந்தத் திசையில் பயணிக்கும் என்பதற்கான அச்சாரம். திமுக ஆட்சி அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எந்தத் திசையில் பயணிக்கப் போகிறது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in