`சில்லறை’ அரசியல் செய்தாரா நடிகர் சுரேஷ்கோபி?

`சில்லறை’ அரசியல் செய்தாரா நடிகர் சுரேஷ்கோபி?
சுரேஷ் கோபிhindu

கோயில்களில் ஒருரூபாய் அரசியல் செய்ததாக கேரளத்தின் பிரபல நடிகரும், பாஜக எம்.பியுமான சுரேஷ் கோபி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கேரளத்தில் பாஜகவை வலுப்படுத்த சுரேஷ்கோபியை மாநிலங்களவை உறுப்பினர் ஆகியிருந்தது பாஜக. அவரது பதவிக்காலம் இந்த ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது. அவர் திருச்சூரை மையமாக வைத்து அரசியல் செய்யும்வகையில் காய்நகர்த்தி வருகிறார். கேரளத்தில் சித்திரை விஷூ கனி காணும் நிகழ்வு நாளை (வெள்ளிக் கிழமை) நடக்கிறது. பொதுவாகவே சித்திரை கனி காணும் நாளன்று கோயில்களில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றுடன் ஒரு கண்ணாடியும் சாமியின் முன்பு வைக்கப்படும். ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு கோயிலில் காய்கறிகளும், ஒரு ரூபாய், 5 ரூபாய் காசுகளும் வழங்கப்படும். சித்திரை கனி காணல் அன்று, இப்படிக் கையில் கிடைக்கும் பணம் பல்கிப் பெருகும் என்பது ஜதீகம். அதனாலேயே கேரளத்தின் அனைத்து ஆலயங்களிலும் காலம், காலமாக இந்த மரபு பின்பற்றப்படுகிறது.

இந்நிலையில் திருச்சூரில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆலயம் ஒன்றுக்குச் சென்ற சுரேஷ்கோபி, ஒரு ரூபாய் காசுகளாக ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதை நாளை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்குக் கொடுக்க வலியுறுத்தினார். ஆனால் இதை வாங்காமல் கேரள அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் திருப்பி அனுப்பினர். கோயில்கள் அனைவருக்கும் பொதுவானவை. அங்கு கேரள அறநிலையத்துறையின் சார்பிலேயே காலம், காலமாக இதற்கென பணம் வழங்கப்பட்டுவருகிறது. அப்படி கொடுக்க வேண்டுமென்றால் அவர் தனது அலுவலகத்திலோ, அல்லது அனைவருக்கும் பொதுவான வேறு பொதுவெளியிலோ வைத்து கொடுக்கலாமே! ஆனால் சுரேஷ்கோபி அரசியல் லாபத்திற்காக கோயில்களை தேர்வு செய்வதாக எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் சுரேஷ்கோபியோ ‘தான் நல்ல மனதுடன் செய்யும் செயலை இவர்கள் எதிர்க்கிறார்கள்’ என இதற்கு எதிராக பேசத் தொடங்கியுள்ளனர்.

ராஜ்ய சபா எம்.பிக்காலம் இந்த மாதத்தோடு முடிவுக்குவரும் நிலையில் கேரளத்தில் திருச்சூரில் கட்சியை வளர்ப்பது தனது பொறுப்பு என்றதோடு, அங்கே அடுத்த தேர்தலுக்கான தன் சீட்டையும் உறுதி செய்துவிட்டே வந்திருக்கிறார் சுரேஷ்கோபி. இனி அவரது அரசியல் அதிரடியாக இருக்கும் என ஆரூடம் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்!

Related Stories

No stories found.