`எடப்பாடி பழனிசாமி இதை நிரூபித்தால் தற்கொலை செய்கிறேன்'- கோவை செல்வராஜ் ஆவேசம்

செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ்
செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ்

"ஓபிஎஸ் உழைக்காமல் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்திருக்க முடியாது" என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை இன்று கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்கள் சுமார் 100 பேருடன் வந்து சந்தித்தார். தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கோவை செல்வராஜ், "ஜனநாயக ரீதியில் சுமார் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் அதிமுகவை நான்கரை ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்து விட்டு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற நினைக்கிறார்.

கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை தேர்தல் ஆணையமே அங்கீகரித்த பிறகு தன்னுடைய சுயநலத்திற்காக பொதுக்குழு கூட்டத்தில் செல்லாது என அறிவித்துவிட்டு இடைக்கால பொதுச்செயலாளராக தன்னைத் தானே எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்துக்கொண்டார்.‌ ஆனால், அதனை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.‌ இருந்தபோதிலும் ஈபிஎஸ் உள்பட அனைவரும் மீண்டும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவோம் என ஓபிஎஸ் பெருந்தன்மையாக அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை ஏற்க மறுக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்சை துரோகி என்றும், பதவி ஆசை பிடித்தவர், உழைக்காமல் பதவி கேட்கிறார் என குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்.‌ ஆனால், உன்மையிலேயே ஓபிஎஸ் உழைத்ததால் தான் எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தார்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மூன்று முறை முதலமைச்சர் பதவியை கொடுத்த பிறகும் அதனை ஓபி‌எஸ் மீண்டும் திரும்பத் தந்தார். ஆனால், இன்றைய நிலையில் ஜெயலலிதாவே முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துவிட்டு திரும்பக் கேட்டால் அவர் தர மாட்டார். ஜெயலலிதாவிற்கே எடப்பாடி துரோகம் செய்திருப்பார்.‌ மேலும், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை திருடிச் சென்றதாக ஓ‌பிஎஸ் மீது எடப்பாடி குற்றம் சாட்டுகிறார். அலுவலகத்தில் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு ஆவணங்கள் திருடப்பட்டிருப்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன்" கூறினார்.

மேலும், "ஓபிஎஸ் புலியாக மாறி கட்சியையும், தொண்டர்களையும் காப்பாற்றுவார். 2023-ல் அனைவரையும் ஒன்றிணைத்து ஒற்றைத் தலைமையில் ஓபிஎஸ் கட்சியை வழிநடத்தி, வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும். பொதுக்குழுவில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டதே தவிர உறுப்பினரில் இருந்து நீக்கவில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in