ஒரே நாடு ஒரே தேர்தல்; வலுக்கும் எதிர்ப்புகள்!

ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல்

2014 ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே பிரதமர் மோடி ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின் போது செயல்படுத்திட வேண்டுமென முனைப்பு காட்டி வருகிறார். அந்த வகையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் செயல்படுத்தத் தயங்கிய திட்டத்தை பிரதமர் மோடி இப்போது கையிலெடுக்கத் துணிந்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்குப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தேவை என்கிறது மத்தியில் ஆளும் பாஜக. அத்துடன், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் அறிவித்தது. அந்தக் குழுவில் இடம்பெற முடியாது என காங்கிரஸ் நிராகரித்துவிட்டது தனிக்கதை.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து அரசியல் கட்சிகள் அலசுவது ஒருபுறமிருக்க, இந்தத் திட்டம் நடைமுறைக்குச் சாத்தியமா என முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமியிடம் கேட்டோம். ‘’ நிச்சயமாகச் சாத்தியமான ஒன்று. ஒரே ஒருமுறை தேர்தலை நடத்திவிட்டால் போதும். பின்பு தானாகவே நடைபெறும். அரசுக்குச் செலவு மிச்சமாகும் அதிகாரிகளுக்கும் பணிச் சுமை இருக்காது.

இந்த விவகாரத்தில் நாம் யோசிக்க வேண்டியது ஒன்று உள்ளது. 1964 முன்பு வரை இந்த முறைதானே இருந்தது. அதன் பின்பு ஏன் மாறியது என்பதைச் சிந்திக்க வேண்டும். நான் அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை. சில பாதகங்கள் இருக்கத்தான் செய்யும், அதே நேரத்தில் பாதகங்களை விடச் சாதகங்களே அதிகம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு செலவு மிச்சம்’’ எனச் சிரித்தார் அவர்.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் - என்,கோபால்சாமி
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் - என்,கோபால்சாமி

இந்தத் திட்டம் குறித்து திமுகவும், அதிமுகவும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தங்களது ஆதரவு - எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தைத் தற்போது திமுக கடுமையாக எதிர்க்கிறது. ஆனால், 1971 காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேசி இருக்கிறார். தனது ’நெஞ்சுக்கு நீதி’ நூலில் அவர் இந்தத் திட்டத்தை ஆதரித்துப் பேசிய கருத்துகள் தான் இப்போது ஆடியோ வடிவில் இணையத்தில் வலம் வருகிறது.

‘’1971-ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, திமுக பொதுக்குழு கூடி நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலையும் இணைத்து நடத்துவது நலம் என்றும், ஒரே ஆண்டின் தொடக்கத்திலும், முடிவிலும் இரண்டு தேர்தல்களை சந்திக்க வேண்டியதை தவிர்க்க முடியும் எனவும், இரட்டிப்புச் செலவு ஆவதை தவிர்க்கலாம் என்றும் தீர்மானம் நிறைவேற்றினோம்.

அரசு அதிகாரிகள் இரண்டு முறை தேர்தல் பணிகளில் ஈடுபடுவதால் வளர்ச்சிப் பணிகளில் அவர்களால் கவனம் செலுத்தமுடியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி பிரதமருக்கு நம் கழகத் தோழர்கள் கடிதம் எழுதுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்" என கருணாநிதி அன்றைக்குப் பேசியுள்ளார்.

ஆனால் இன்று, ” ’ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற மத்திய பாஜக அரசின் அழுத்தம், நமது கூட்டாட்சி அமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்’’ எனச் சொல்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடும் மாறி மாறியே வந்திருக்கிறது. 2015-ல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அதிமுக அறிக்கை அளித்தது.

ஆனால், 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரம் தொடர்பாக சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அதில், “தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைக்கும் வகையில் எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது’’ என குறிப்பிட்டிருந்தார் எடப்பாடி.

திமுக எம்.பி. கனிமொழி சோமு
திமுக எம்.பி. கனிமொழி சோமு

ஒரே நாடு ஒரே தேர்தல் பொறுத்தவரை திராவிட கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை காலத்திற்கு ஏற்றார் போல் மாற்றி வந்துள்ளன. இந்த மாற்றம் ஏன் என திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமுவிடம் பேசினோம்.

‘’ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நமக்கு ஒத்துவராத ஒன்று. பல்வேறு மொழி வெவ்வேறு இனங்கள் வசிக்கும் வேற்றுமையில் ஒற்றுமையான நாடு இந்தியா. அப்படி இருக்கும்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எப்படி ஒத்து வரும்? நிச்சயமாக ஒத்து வராது. அதுமட்டுமல்ல... இது கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரான ஒன்று.

நாடு முழுவதும் மக்களவைக்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் அளவிற்கு நம்மிடம் போலீஸ் படையோ துணை ராணுவப் படையோ இல்லை. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஹிட்லர் ஆட்சியைப் போல எல்லோரும் தங்களுக்கு கீழ் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள். இதைத்தான் நாங்கள் தவறு என்கிறோம்.

ஜனநாயகத்தில் ஒற்றைக் கருத்துடன் யாரும் பயணிக்க முடியாது. எங்களுடைய முன்னாள் முதல்வரும் மறைந்த தலைவருமான கலைஞர், அன்றைக்கு இருந்த சூழலில் அப்படி கூறியிருக்கலாம். அது அப்போது சாத்தியப்பட்டிருக்கலாம் ஆனால் தற்போது, அரை நூற்றாண்டைக் கடந்துவந்துவிட்டோம் இப்போது அது சாத்தியமில்லை என்பதுதான் எனது கருத்து. அதிமுகவை பொறுத்தவரை கட்சியில் அண்ணாவின் பெயரை வைத்துக்கொண்டு, அதற்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள் என்பதுதான் உண்மை’’ என்றார் காட்டமாக.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். ‘’ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது நேரத்தையும், பொருட் செலவையும் மிச்சப்படுத்தும். மேலும், கூட்டாட்சி மற்றும் மாநிலம் ஆகிய இரண்டுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு நீண்ட கால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும். அதனால் நாங்கள் ஆதரிக்கிறோம்.

தேர்தலைக் கண்டு திமுக ஏன் பயப்பட வேண்டும். தைரியமாக சொல்ல வேண்டியது தானே... எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்துங்கள், நாங்கள் சந்திக்கிறோம். எங்கள் ஆட்சி தான் வரும் என்று உங்களால் தைரியமாகச் சொல்ல முடியுமா? ஆனால், நாங்கள் சொல்கிறோம், எப்போது வேண்டுமானாலும்.. ஏன் நாளைக்கே தேர்தல் வைத்தால்கூட நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என்றார் அவர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் அரசியல் லாபத்திற்காக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே வருகின்றன. ஆனால், இன்றைய நிலவரப்படி இந்திய மாநிலங்களில் பெருவாரியாக பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தான் ஆட்சியில் இருக்கின்றன. இந்தத் திட்டத்தை இப்போது அமல்படுத்துவதால் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சியை இழக்க நேரிடும். ஆனால், அவர்களே அதைப்பற்றி கவலைப்படாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரிக்கும் போது மற்றவர்கள் எதற்காக இந்தத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in