ஆளுநருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்ததோ தெரியவில்லை: சந்தேகம் கிளப்பும் சபாநாயகர் அப்பாவு

தமிழக சபாநாயகர் அப்பாவு
தமிழக சபாநாயகர் அப்பாவு ஆளுநருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்ததோ தெரியவில்லை: சந்தேகம் கிளப்பும் சபாநாயகர் அப்பாவு

’’ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என எந்த சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார்’’ என தமிழக சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழக சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, ‘’ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பேரவைக்கு அதிகாரமில்லை என எந்த சட்டத்தை வைத்து ஆளுநர் கூறுகிறார். ஆளுநர்களின் உரிமைகள் குறித்து உச்சநீதிமன்றம் பலமுறை எடுத்துக் கூறியுள்ளது.

அதில் மாநில அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், மாநில அரசால் சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது சந்தேகங்கள் இருப்பின் ஆளுநர் விளக்கம் கேட்டுப் பெறலாம். அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். ஆனால் அதனை விடுத்து ஆளுநர் மசோதாவை நிராகரிப்பது சரியான முறையாக தெரியவில்லை.

அரசியல் சட்டத்தின் 200-வது பிரிவை ஆளுநர் படிக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இந்த அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கொண்டு வரவில்லை. ஆரம்பத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஆதரவாகத்தான் இருந்தார். ஆளுநருக்கு எங்கிருந்து எந்த அழுத்தம் வந்ததோ தெரியவில்லை.

2021-ம் ஆண்டு ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் சட்ட முன் வடிவுக்கு இவ்வளவு காலதாமதம் தேவையில்லை. சட்டமன்றத்திற்கு அதிகாரமில்லை என்ற வார்த்தை ஆளுநர் தவிர்த்திருக்க வேண்டும். யாருடைய அழுத்தம் காரணமாக ஆளுநர் இம்மாதிரி செயல்படுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை.

மத்திய அமைச்சர் மிகவும் தெளிவாக கூறிவிட்டார். இது மாநில பட்டியலில் உள்ளது. அதற்கான சட்டத்தை மாநில அரசுகளே நிறைவேற்றிக் கொள்ளலாம். 17 மாநிலங்களில் இந்த தடை சட்டம் உள்ளது. 18-வது மாநிலமாக நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு ஏன் அனுமதி அளிக்கமாட்டீர்கள் என்பது தானே எங்கள் கேள்வி.

இந்த விளையாட்டு ‘skill ' இல்லை, தொழில் அதிபர்கள் இந்த விளையாட்டு மூலம் பொதுமக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள் இதுதான் ‘skill ' எனக்கு தெரிகிறது’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in