கேஜ்ரிவால் வியூகம் எடுபடுமா?

சீனியர்களை குறிவைக்கும் தீர்த்த யாத்திரை திட்டம்!
கேஜ்ரிவால் வியூகம் எடுபடுமா?
அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லியைத் தொடர்ந்து இதர வட மாநிலங்களிலும், ஆத் ஆத்மி காலூன்றுவதற்கான ஏற்பாடுகளில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

இமாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, குஜராத், உத்தர பிரதேசம் என அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 6 மாநிலங்களின் தேர்தல்களிலும், அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்கிறது. பாஜகவை தன்னுடைய பிரதான எதிரியாக கருதும் ஆம் ஆத்மி, வாக்காளர்களை கவர பாஜக பாணியிலான வியூகத்துடன் முன்னேறுகிறது.

அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்

இம்மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் கேஜ்ரிவால், இலவச தீர்த்த யாத்திரை என்ற திட்டத்தை முன்வைத்து வருகிறார். இந்துக்களுக்கு அயோத்தி, இஸ்லாமியருக்கு அஜ்மிர், சீக்கியர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் என புனித தலங்களுக்கான இலவச யாத்திரையை பிரதான வாக்குறுதியாக வழங்குகிறார். இதற்காக, 2018-ல் டெல்லி அரசு சார்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் நடப்பாண்டு புனித யாத்திரையை, வெகு விமர்சையுடன் டிச-3 அன்று கேஜ்ரிவால் தொடங்கி வைக்கிறார்.

டெல்லி மட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஆம் ஆத்மி ஆட்சி மலர வேண்டுமென்பதே கேஜ்ரிவாலின் இறுதி இலக்கு. அதன் பொருட்டு, மோடியை எதிர்த்துப் பிரதமர் வேட்பாளராகவும் நின்று ஒருமுறை சூடுபட்டார். எடுத்த எடுப்பில் பிரதமர் நாற்காலியை குறிவைப்பது நடைமுறையில் எடுபடாது என்பதை உணர்ந்தவர், மாநில வாரியாக ஆம் ஆத்மியை வலுப்படுத்த தொடங்கினார். அப்படியும் கட்சி போதிய வளர்ச்சி இன்றி தள்ளாடியது.

அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்

ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படையான ஆட்சி என ஆம் ஆத்மியின் உத்திகள் இளைஞர்களை சென்றடைந்த அளவுக்கு, சீனியர்களை கவரவில்லை என்பதைத் தாமதமாகவே அறிந்தார். தற்போது இந்த சீனியர்களின் வாக்குகளை குறிவைக்கும் இலவச புனித யாத்திரை திட்டத்தை, தேர்தலுக்குத் தயாராகும் 6 மாநிலங்களிலும் அறிவித்து வருகிறார். தங்களுக்கான வாக்கு வங்கியில் கேஜ்ரிவால் கன்னம் வைப்பதை, பாஜகவினர் அதிர்ச்சியோடு கவனித்து வருகிறார்கள்.

6 மாநிலங்களிலும் தான் அறிவித்த வாக்குறுதி, டெல்லியில் அமலாவதைக் காட்டுவதற்காக, நடப்பாண்டு புனித யாத்திரையை உத்வேகத்துடன் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அப்படித் தொடங்கும் புனித யாத்திரைக்கான தலங்களின் வரிசையில், தற்போது தமிழகத்தின் வேளாங்கண்ணியையும் கடைசிநேரத்தில் சேர்த்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in