வாக்குகள் எண்ணும் நாளில் உச்ச நீதிமன்றத்தை நாடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

வாக்குகள் எண்ணும் நாளில் உச்ச நீதிமன்றத்தை நாடும் காங்கிரஸ்: என்ன காரணம்?

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பஞ்சாபைத் தவிர 4 மாநிலங்களிலும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது.

இந்தச் சூழலில், 2017 கோவா தேர்தலில் வென்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்குத் தாவியதை எதிர்த்து இன்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

2017 கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக 13 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. காங்கிரஸ் 17 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. எனினும், சிறு கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜகவே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. காங்கிரஸுக்கு அடுத்த அடியாக, முதலில் காங்கிரஸ் 2 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 15 ஆகக் குறைந்தது. 2019-ல் அவர்களில் 10 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் கட்சி, அணி மாறிய 10 எம்எல்ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோவா சட்டமன்ற சபாநாயகரிடம் முறையிட்டது. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறியதால் தகுதி நீக்கம் செய்யத் தேவையில்லை எனச் சொல்லி அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றமும் கோவா சபாநாயகரின் முடிவே செல்லும் எனத் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது காங்கிரஸ்.

2022 தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள், கோவாவில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் எனக் கூறியிருந்தன. எனினும், இந்த முறையும் பாஜகவே ஆட்சியமைக்கும் எனக் கருதும் அளவுக்கு அக்கட்சி முன்னிலை வகுத்துவருவது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in