அலறவைக்கும் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு!

ஏழைகளுக்குப் பாதிப்பில்லை என அமைச்சரே சொல்லலாமா?
அலறவைக்கும் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு!

பண்டிகைக் காலத்தில் ஆம்னி பேருந்து கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிக்குள்ளாகி இருக்கும் நேரத்தில், "ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழைகளைப் பாதிக்காது. ஏழை எளிய மக்களுக்காக அரசுப் பேருந்துகள் முறையாக இயக்கப்பட்டு வருகிறது" என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சொல்லி இருப்பது கடும் விமர்சனத்தைக் கிளப்பி இருக்கிறது.

ஆயுத பூஜை, தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் என பண்டிகை காலம் வரிசைக்கட்டத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில்தான் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருக்கக்கூடிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும்போது ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுகிறது.

முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுபவர்கள் சிரமமின்றி அரசுப்பேருந்து, ரயில்களில் வழக்கமான கட்டணத்தில் முன்பதிவு செய்துவிடுகின்றனர். ஆனால், முன்கூட்டியே திட்டமிட முடியாதவர்களுக்கு ஆபத்பாந்தவன் ஆம்னி பேருந்துகள்தான். விழா காலங்களிலும் வார இறுதி நாட்களிலும் ஆம்னி பேருந்து கட்டணங்கள் கேள்வி கேட்பார் இன்றி அது இஷ்டத்துக்கு உயர்ந்து விடும். அரசுத் தரப்பில் எத்தனை எச்சரிக்கை மணி அடித்தாலும் பயன் இருக்காது. இந்த சூழலில் தான் அமைச்சரின் கருத்து விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை...
ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை...

சென்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அண்மையில் ஆலோசனை நடத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கூடுதல் கட்டணம் என்று தெரிந்தே சிலர் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். சகல வசதியோடு இருக்கும் என்ற எண்ணத்தோடுதான் அவர்கள் ஆம்னி பேருந்தில் பயணம் செய்கிறார்கள். அதிக கட்டணம் என்பதை பார்த்துவிட்டு தெரிந்துதான் அவர்கள் ஆம்னி பேருந்து ஆப் மூலம் டிக்கெட் பதிவு செய்து தங்கள் பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால் அவர்கள் புகார் செய்வதில்லை. எனவே, இது ஏழை, எளிய மக்களுக்கான பாதிப்பு கிடையவே கிடையாது. ஏழை, எளிய மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு தேவையான கூடுதல் பேருந்து வசதிகளையும் அரசு தொடர்ந்து அறிவித்து அதன்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது" என்று சொன்னார். இதுதான் சர்ச்சையானது.

இது தொடர்பாக உடனடியாக விளக்கமளித்த அமைச்சர், “ஆம்னி பேருந்துகள் என்பது ஒப்பந்த வாகனம். அவர்களுக்கு மற்ற நாட்களைவிட பண்டிகை நாட்களில்தான் பேருந்துகள் முழுமையாக நிரம்புவதாகச் சொல்கிறார்கள். அரசுப்பேருந்து என்பது மக்களுக்கான சேவையாகும். ஆனால், ஆம்னி பேருந்துகள் சேவை அடிப்படையில் இயங்கவில்லை. தொழிலாகத்தான் இதைச் செய்கிறார்கள். இருப்பினும் கட்டுப்பாட்டில் இந்த கட்டணம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில்தான் ஒரு நியாயமான கட்டணம் நிர்ணயிக்கச் சொல்லி ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.

அரசுப் பேருந்துகள் ஏசி, ஸ்லீப்பர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இயக்கப்படுகின்றன. ஆனால், அதனையும் மீறி தெரிந்தே அதிகக்கட்டணம் கொடுத்து ஆம்னி பேருந்துகளில் மக்கள் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்காகவும்தான் இப்போது கட்டண நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறோம்” என தெரிவித்தார்.

பேருந்தில் சிவசங்கர்...
பேருந்தில் சிவசங்கர்...

சொகுசு வசதிக்காகவே ஆம்னி பேருந்துகளில் மக்கள் பயணிக்கிறார்கள் என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுவதே தவறு என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். இது தொடர்பாக சென்னையில் பணிபுரியும் தனியார் நிறுவன ஊழியரான கார்த்தி நம்மிடம் பேசுகையில், “ பண்டிகை காலங்களில் கடைசி நேரத்தில் தான் எங்களுக்கு விடுப்பு உறுதிசெய்யப்படுகிறது. அப்போது அரசுப் பேருந்துகள், ரயில்கள் எதிலும் எங்களால் முன்பதிவு செய்யமுடிவதில்லை. இந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் மட்டும்தான் எங்களுக்கான ஒரே வழி. கடைசி நேரத்தில் ஊருக்குப் புறப்பட்டு நிற்கும்போது ஆம்னி பேருந்துகள் வைப்பதுதான் கட்டணம். சாதாரண நாட்களில் 500 ரூபாய் கட்டணம் என்றால் பண்டிகை நாட்களில் 1,000 முதல் 2,000 வரை போகும். குடும்பத்தினருடன் சென்றால் ஒரு மாத சம்பளமே காலியாகிவிடும். சொகுசு வசதியையெல்லாம் அப்போது நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. ஊருக்குப் போகவேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே நோக்கமாக இருக்கும்” என்றார்.

இது குறித்து நமக்கு விளக்கமளித்த திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “தனியார் பேருந்துகளில் மூன்று வகை உள்ளது. ஒன்று, ரெகுலரான ரூட்களில் எப்போதும் அரசுப் பேருந்துகள் போலவே இயங்கும் தனியார் பேருந்துகள். இரண்டாவது, ஆம்னி பேருந்துகளிலேயே ரூட் பர்மிட் வைத்துள்ள பேருந்துகள். இவை இரண்டுமே அரசின் கட்டண வரம்புக்குள் வரும். மூன்றாவது வகை என்பது, சுற்றுலா செல்லும்போது ஒப்பந்தம் செய்து பேருந்தில் செல்வோம் அல்லவா, அந்த வகையான ஆம்னி பேருந்துகள். இவர்கள் ரெகுலராக பேருந்துகளை இயக்குவது இல்லை, ஒப்பந்த அடிப்படையில் தேவைப்படும்போது மட்டும் பேருந்துகளை இயக்குவார்கள். இதில் பயணம் செய்யும் 40 பேரும் சேர்ந்து பேருந்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து செல்வது போலவே இந்த வாகனங்கள் இயக்கப்படுகிறது என்பதால் இதனை அரசால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால், அறிவுறுத்த முடியும்.

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே ஆம்னி பேருந்துகள் இப்படித்தான் இயங்குகிறது. மற்ற மாநிலங்களில் சாதாரண தனியார் பேருந்துகளிலேயே பண்டிகை காலங்களில் அதிகக்கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில், அதுபோன்ற வாகனங்களின் கட்டணங்களை முறைப்படுத்தி விட்டோம். அதிகக் கட்டணம் தொடர்பாக பயணிகள் புகார் செய்வதால் தமிழக அரசு ஆம்னி வகை பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி வருகிறது. இந்த அடிப்படையில்தான் அமைச்சர் அந்த கருத்தைச் சொன்னார். ஆனால், அதை சிலர் தவறாக புரிந்துகொண்டனர். ஏழை, எளிய மக்கள் நலனைப் போலவே அனைத்து தரப்பு மக்களுக்காகவுமே இந்த அரசு இயங்குகிறது” என்று சொன்னார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

ஏற்கெனவே அனைத்துப் பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ள நிலையில், பண்டிகை காலங்களை மக்கள் பீதி கலந்த மகிழ்ச்சியுடனேயே வரவேற்கிறார்கள். வெளியூர்களில் வசிக்கும் மக்களின் பெரும் கவலையாக போக்குவரத்து செலவுகள் மாறியுள்ளது என்பது நிதர்சனம். எனவே, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் அரசு தரப்பில் கலந்தாலோசித்து குறைவான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இப்போது குறைக்கப்பட்ட கட்டண விவரங்களை அறிவித்திருக்கிறார்கள். இதுவே சற்று கூடுதல்தான் என்றாலும் இதையாவது முறையாக செயல்படுத்துகிறார்களா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாமே கண் துடைப்பு நாடகம் என்றாகிவிடும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in