`சொல்லும், செயலும் ஒரே திசையில் அமைந்திட வேண்டும்'- திமுக தேர்தல் வாக்குறுதியை நினைவூட்டும் திருமாவளவன்

திருமாவளவன்
திருமாவளவன்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக திமுகவிடம் தோழமை உணர்வோடு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தன் முகநூல் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். தோழமை உணர்வோடு மென்மையாக அதில் ஒருகுத்தும் குத்தியுள்ளார்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக போராடிவந்தனர். ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட அமைப்புகளும் இதை தீவிரமாக முன்னெடுத்துவந்தன. இந்நிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என்னும் தொணியில் பேசினார். மறுநாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடமும் செய்தியாளர்கள் இதைக் கேள்வியாகக் கேட்டனர். அப்போது அவர், ‘பழைய ஓய்வூதியத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும்’ என்று சொன்னார். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டத்தில் குழப்பமான சூழல் நிலவிவருகிறது.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன் முகநூல் பக்கத்தில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதுதான் தமிழக அரசின் தற்போதைய இன்றியமையாதவொரு கடமையாகும். சொல்லும், செயலும் ஒரே திசையில் அமைந்திட வேண்டும். மாண்புமிகு முதல்வர் அவர்கள் நலம்புரிய வேண்டுகிறேன்” என பதிவிட்டு அதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முகநூல் பக்கமும் டேக் செய்யப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என கூறியிருந்தது. இந்நிலையில் இப்போது திருமாவளவன் சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என பதிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டி இரண்டையும் முடிச்சுப்போட்டு கமெண்ட்களை பறக்கவிடுகின்றனர் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in